சென்னை:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற தமிழரான ஏ.சேகர் அமெரிக்க கப்பற்படையின் அநீதிமான துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அவருடன் பயணித்த 3 பேர் காயமுற்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் கொலைச் செய்யப்பட்ட மீனவர் ஏ.சேகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘துபாய் நாட்டில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் அருகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சேகர் என்ற மீனவர் உயிரிழந்தார் என்றும், மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்றும் செய்தி கேட்டு நான் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஏ.சேகரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்த எம். பாண்டுவநாதன், கே. முத்துக்கண்ணன் மற்றும் ஆர்.முத்துமணிராஜ், ஆகியோர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் சேகரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment