வாஷிங்டன்:நகரத்தில் ஷியா முஸ்லிம்களின் நடவடிக்கைகளையும், வழிப்பாட்டு தலங்களையும் கண்காணிக்க உத்தரவிடும் நியூயார்க் போலீஸின் ரகசிய ஆவணத்திற்கு அமெரிக்காவில் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஈரானுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டுள்ள சூழலில் ஷியா முஸ்லிம்களை கண்காணிப்பதை தீவிரப்படுத்த உத்தரவிடும் 2006-ஆம் ஆண்டு தயார் செய்த போலீஸ் ஆவணம் வியாழக்கிழமை அசோசியேட் ப்ரஸ் வெளியிட்டதை தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.
முஸ்லிம்களை கண்காணிக்கும் நியூயார்க் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக சுதந்திரமான விசாரணை கோரி அட்டர்னி ஜெனரல் எரிக்கிடம் 33 மனித உரிமை அமைப்புகள் கையெழுத்திட்ட கடிதத்தை அளித்தன.
முஸ்லிம்கள் மீது நியூயார்க் போலீஸ் காட்டும் பாரபட்சம்தான் ரகசிய ஆவணம் மூலம் வெளியாகியுள்ளது என அக்கடிதத்தில் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். ஆனால் அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் இது குறித்து பதில் அளிக்கவில்லை.
இதனிடையே, முஸ்லிம்களை கண்காணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் போலீஸ் தலைமையகத்தை நோக்கி நேற்று நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கண்டன பேரணியை நடத்தினர்.

0 கருத்துரைகள்:
Post a Comment