டமாஸ்கஸ்/மாஸ்கோ:சிரியாவில் அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில் அரபு நாடுகளும், மேற்கத்திய நாடுகளும் இணைந்து தயாராக்கிய நகல் தீர்மானம் சிரியாவில் உள்நாட்டு போரை உருவாக வழி வகுக்கும் என்றும், அது ஒருபோதும் நல்லிணக்க வழியை ஏற்றுக்கொள்ள இரு பிரிவினரையும் தூண்டாது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆதரிக்க கோரி அரபு லீக் பொதுச்செயலாளர் நபீல் அல் அரபியின் அறிக்கைக்கும் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தை வீட்டோ செய்வோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கென்னடி காற்றிலோவ் தெரிவித்துள்ளார்.
ஆஸாத் ராஜினாமா செய்யவேண்டும் என அரபு நாடுகளும், மேற்கத்திய நாடுகளும் கோரிக்கை விடுக்கும் வேளையில் ரஷ்யா ஆஸாதிற்கு ஆதரவான முடிவை எடுத்துவருகிறது. பஸ்ஸாருல் ஆசாதையும், எதிர்கட்சியினரையும் பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளது. அதேவேளையில், தீர்மானத்தை சிரியா அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் தயாராக்கிய தீர்மானம் வெட்கக்கேடானது என சிரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
நேற்று சிரியாவில் நடந்த மோதல்களில் 40 பேர் பலியாகியுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

0 கருத்துரைகள்:
Post a Comment