தளிப்பரம்பு(கேரளா):கேரள மாநிலம் தளிப்பரம்பில் பட்டுவம் அரியல் என்ற பகுதியில் நேற்று முன் தினம் உருவான சி.பி.எம்-முஸ்லிம் லீக் மோதல் மேலும் பல இடங்களுக்கு பரவியுள்ளது.முஸ்லிம் லீக் முன்னணி அமைப்பான எம்.எஸ்.எஃபின் உள்ளூர் தலைவரான அப்துல் ஷூக்கூர்(வயது 23) என்ற இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இடையே மோதல் நிலவும் பட்டுவம் அரியல் என்ற பகுதிக்கு வருகை தந்த சி.பி.எம் கண்ணூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் மற்றும் டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் நடந்து சற்று இடைவெளியில் அப்பகுதியை சார்ந்த எம்.எஸ்.எஃப் அமைப்பின் உள்ளூர் தலைவர் அப்துல் ஷூக்கூரை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்தது.
இக்கொலை சம்பவத்திற்கு காரணம் சி.பி.எம் என்று முஸ்லிம் லீக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அப்பகுதியில் நடந்த குண்டுவீச்சில் 4 முஸ்லிம் லீக் தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் லீக்கின் மாவட்ட கமிட்டி அலுவலகம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லீக் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. வன்முறை நடந்த பகுதிகளில் 3 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலைச் செய்யப்பட்ட அப்துல் ஷூக்கூருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர்.
சி.பி.எம் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து இடது சாரி முன்னணியும், முஸ்லிம் இளைஞரின் கொலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக கூட்டணியும் இன்று(செவ்வாய்) கண்ணூர் மாவட்டத்தில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. சி.பி.எம் குண்டர்கள் என கருதப்படும் 20 பேரை கொண்ட கும்பல்தான் அப்துல் ஷூக்கூரை கொலைச் செய்துள்ளது என கருதப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment