கொச்சி:2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலிய கப்பல் காவலாளிகள் இருவரை நீண்ட இழுபறியின் முடிவில் போலீஸ் கைது செய்துள்ளது.
நேற்று மாலை 3.30 மணிக்கு இத்தாலி கப்பல் காவலாளிகளான மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகியோரை கேரளா மத்திய மண்டல ஐ.ஜி பத்மகுமாரின் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இன்று கொல்லம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். முதல் நோக்கு குற்றவாளி இல்லை என்ற போதிலும் கப்பல் கேப்டன் உம்பர்டோ விட்டலியோவை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த மீனவர்கள் அஜேஷ் பிங்கி, ஜலாஸ்டின் ஆகியோர் கொல்லம் பகுதியை ஒட்டிய கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கடற்கொள்ளையர்கள் என்று கருதி, இத்தாலியைச் சேர்ந்த ‘என்ரிகா லெக்ஸி’ என்கிற வணிகக் கப்பலிருந்த காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அந்தக் கப்பல் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் இருந்த மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகியோர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சரணடையும்படி கேரள போலீஸார் சனிக்கிழமை கெடுவிதித்தனர்.
கெடுவை ஏற்றுக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவர்களை ஒப்படைப்பதற்கு கப்பல் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும், அவர்கள் 8 மணி நேரம் தாமதமாகவே ஒப்படைக்கப்பட்டனர். எர்ணாகுளம் சரக போலீஸ் ஐ.ஜி. கே.பத்மகுமார், கொச்சி போலீஸ் ஆணையர் எம்.ஆர். அஜித்குமார், கொல்லம் எஸ்.பி. சாம் கிறிஸ்டி டேனியல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கப்பலுக்குச் சென்று மாலை 4 மணிக்கு அவர்கள் இருவரையும் கரைக்குக் கொண்டுவந்தனர்.
இத்தாலி தூதரக தலைமை அதிகாரி கியான் பாவ்லோ குடிலோ, பாதுகாப்பு அதிகாரி பிரான்கோ ஃபாவ்ரே ஆகியோரும் விசாரணையின்போது உடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தாலி காவலர் இருவர் மீதும் கொல்லம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் பிறகு, அவர்கள் இருவரையும் அருகிலுள்ள வெலிங்டன் தீவிலுள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப்படை விருந்தினர் மாளிகைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கொச்சி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கப்பல் கேப்டனிடமும் சுமார் 20 சிப்பந்திகளிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அளித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கப்பலில் உள்ள ஆவணங்களையும் போலீஸார் சோதனையிட்டனர் என்று ஐ.ஜி. பத்மகுமார் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை இத்தாலியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இதுவரை செய்து கொள்ளப்படாததால், சொந்தமாக இருதரப்பினரும் புலனாய்வு செய்து தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது.
நிராயுதபாணிகளை ஆயுதமேந்தியவர்கள் சுட்டுக் கொல்வதை ஏற்க முடியாது என்கிற கருத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இந்த விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட முறைக்கு இத்தாலிய அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், “பேச்சு நியாயமாகவும் விரிவாகவும் இருந்தது. எமது நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்” என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment