புதுடெல்லி:நிழலுக தாதா என கருதப்படும் அபூ சலீமை இந்தியாவிடம் ஒப்படைத்ததை ரத்துச்செய்த போர்ச்சுகல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தை அணுகுகிறது.
டெல்லி போலீசின் வழக்கறிஞரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக மும்பை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த அபு சலீம், போலி பாஸ்போர்ட் வழக்கில் போர்ச்சுகல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் பாலிவுட் நடிகை மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டார். தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதால் அவரை ஒப்படைக்கக் கோரி இந்திய அரசின் சார்பில் போர்ச்சுகல் நாட்டிடம் கோரப்பட்டது.
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அபு சலீம், மோனிகா பேடி ஆகிய இருவரும், 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மரண தண்டனை விதிக்கும் நாடுகளுடன் கைதிகளை பரிமாற்றிக் கொள்ள ஐரோப்பிய யூனியன் சட்டங்களில் வழிவகை இல்லை என்பதாலேயே இத்தகைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அபூ சலீமை ஒப்படைத்த பிறகு “திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான மாகாராஷ்டிர மாநிலத்தின் காவல் கட்டுப்பாட்டுப் பிரிவு” மரண தண்டனை வழங்கக் கூடிய பிரிவுகளின் அடிப்படையிலான குற்றங்களைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனது மீது இந்தியா பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகள் போர்ச்சுகல் நாட்டின் கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் நிபந்தனைகளை மீறுவதாக உள்ளதாக அந்நாட்டின் லிஸ்பன் உயர் நீதிமன்றத்தில் சலீம் முறையிட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் சலீமின் முறையீட்டை ஏற்று அவரது நாடு கடத்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து போர்ச்சுகல் உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் சலீமின் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அங்கும் சலீமை நாடு கடத்தியதை ரத்து செய்து அவரை மீண்டும் போர்ச்சுகலிடம் ஒப்படைக்க ஜனவரி 14-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி மாநில காவல் துறையின் சார்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாகாராஷ்டிர மாநில சிறப்புப் பிரிவு போலீஸார் சலீம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை உடனடியாக ஏற்று விசாரிக்கும்படி கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், நீதிபதி முக்தா குப்தாவிடம் கேட்டுக் கொண்டார். சலீம் நாடு கடத்தப்பட்ட விஷயம் சிக்கலான நிலையில் உள்ளதாகவும், இதுகுறித்து போர்ச்சுகல் நாட்டு அரசியலமைப்பு அமர்விடம் சிபிஐ முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் நீதிபதி முக்தா குப்தா அவசர மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தார். தான் வழக்குரைஞராக பணியாற்றியபோது இது தொடர்பான வழக்கில் சலீமுக்கு எதிராக ஆஜரானதாகவும், அதனால் இம்மனுவை வேறு அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாகவும் உத்தரவிட்டார். சலீமின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.எஸ்.கான், எந்தவித நடவடிக்கைகளுக்கும் தான் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment