இஸ்லாமாபாத்:கொந்தளிப்பான பாக்.அரசியலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் விதமாக புதிய வழக்குகளும், மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியும், அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியும் தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்வதற்கான தந்திரங்களை உருவாக்கி வருகின்றனர்.
சர்தாரி மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் சம்மன் வழங்கப்பட்டுள்ள கிலானி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராவார். ஆனால், நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர தேவையில்லை என்பது அவருடைய முடிவாகும்.
பி.பி.பி(பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டி)கட்சி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. சர்தாரியின் கறுப்புப் பணம் குறித்த சுவிஸ் வங்கியின் கணக்கு விபரங்களை நீதிமன்றத்திற்கு அளிக்க தேவையில்லை என்றும் பி.பி.பி கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. கிலானி நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு நீதிமன்றத்தின் கோபம் தணியும் என பி.பி.பி தலைமை கருதுகிறது.
பிரபல வழக்கறிஞரும்,முன்னாள் அமைச்சருமான அஹ்ஸன் கிலானியின் வழக்கில் ஆஜராகிறார்.
சர்தாரிக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளாமல் இருக்க சட்டரீதியான பாதுகாப்பு உள்ளது என அஹ்ஸன் கூறுகிறார். உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என அரசியல் சாசனம் கூறுவதாக அஹ்ஸன் கூறியுள்ளார். கிலானியின் சட்டவிரோத நியமனங்களுக்காக அவர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கை தொடுப்பதற்கு நேசனல் அக்கவுண்டபிலிட்டி பீரோ(NAB)முயன்று வருகிறது.
இதற்கிடையே,பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து கிலானியால் நீக்கப்பட்ட லெஃப்.ஜெனரல் காலித் நயீம் அளித்த மனுவில் பாக்.நீதிமன்றம் சர்தாரி மற்றும் கிலானியிடம் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ராணுவத்தளபதி கயானியுடன் நெருக்கமாக உள்ள நயீம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
‘மெமோகேட்’ பிரச்சனையை முதன் முதலில் வெளிக்கொணர்ந்த தொழிலபதிபர் மன்சூர் இஜாஸ் மீது க்ரிமினல் குற்றம் சுமத்தக்கோரி பி.பி.பி உறுப்பினர் காலித் ஜாவேத் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்டு பொய்யை பரப்பியதாக இஜாஸ் மீது குற்றம் சாட்டிய மனுவைத்தான் பி.பி.பி உறுப்பினர் தாக்கல் செய்தார். இதற்கிடையே, ‘மெமோ கேட்’ விவாதம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக பாகிஸ்தான் வருவதற்கு இஜாஸிற்கு விசா அனுமதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment