Thursday, January 26, 2012

சக்தி பெறுவதற்காக வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

pfi
மலப்புரம்(கேரளா):வாக்கு வங்கி அரசியலை புறக்கணித்துவிட்டு சக்தி பெறுவதற்காக வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி21,22 தேதிகளில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மலபார் ஹவுஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான சமூகம் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சக்திப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்ட, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒரு பார்வை:

1.உ.பி உள்பட5 மாநில தேர்தல்கள் குறித்தும், முஸ்லிம்கள் தேர்தலில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து பொதுக்குழு விவாதித்தது.

ஆளுங்கட்சிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் முஸ்லிம்களின் உண்மைநிலையை கண்டும் காணாதது போல் நடிக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகளின் மீது தேசிய பொதுக்குழு கோபத்தையும், கவலையையும் வெளிப்படுத்தியது.

சாதி அரசியலையும்,முஸ்லிம் வாக்கு வங்கிகளையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வரும் இக்கட்சிகள் முஸ்லிம்களின் நிலையை மாற்ற முன்வருவதில்லை. பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் போலவே இக்கட்சிகளும் முஸ்லிம்களை ஒன்றிணைய அனுமதிப்பதில்லை மேலும் அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள்.

உ.பியில் ஆட்சியில் அமர்ந்துள்ள பி.எஸ்.பி இதர கட்சிகளைப் போலவே காவல்துறையையும், உளவுத்துறையையும் பயன்படுத்தி முஸ்லிம்களின் மத்தியில் பயம் மற்றும் பீதியை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து முஸ்லிம்கள் பீதி வயப்படுத்தப்படுகின்றார்கள். முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பசியில் இருந்தும், பயத்தில் இருந்து விடுவிக்கவும், வறுமை, கல்வியின்மை,வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை அகற்றவும் புதிதாக உருவாகியுள்ள எஸ்.டி.பி.ஐ மற்றும் அதேக் கொள்கையைக் கொண்ட கட்சிகளாலும் மட்டுமே முடியும் என தேசிய பொதுக்குழு எண்ணுகிறது.

 அதன் அடிப்படையில் உ.பி மற்றும் இதர மாநிலங்களில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் எந்தத் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ தங்களது வேட்பாளர்களை களமிறக்குகிறதோ அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ போட்டியிடாத தொகுதிகளில் முஸ்லிம்களின் பிரச்சனைகளில் சாதகமாக எந்த வேட்பாளர் செயல்படுவாரோ அவருக்கும் வாக்களிக்கும்படி பொதுக்குழு கேட்டுக்கொண்டது.

2.கடந்த60 வருடங்களாக ஃபலஸ்தீன் மக்களின் மீது போர் தொடுத்து, அதை நியாயப்படுத்திவரும் உலகின் முதல் பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் விவசாயம், ராணுவம் என அனைத்து துறைகளிலும் இந்தியா உறவு வைத்துள்ளது. இஸ்ரேலின் மிகப்பெரிய நுகர்வோராக இந்தியா மாறி வருகிறது. இது இந்தியாவின் வருங்காலத்திற்கான எச்சரிக்கையாக பாப்புலர் ஃப்ரண்டின் பொதுக்குழு அவதானிக்கிறது.

இஸ்ரேலுடன் இந்தியா உறவை ஆரம்பித்த பின்புதான் பல விடை தெரியாத குண்டுவெடிப்புகள் இந்தியாவில் அரங்கேறின. இஸ்ரேலின் தூதரகத்தை பெங்களூரில் திறப்படு உள்ளிட்ட அண்மைக்கால இந்தியாவின் முடிவு நமது நாட்டின் கொள்கையில் சியோனிச தாக்கம் அதிகரிப்பதன் அடையாளமாகும். ஆகவே தேசிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடனான அனைத்து தொடர்பையும் துண்டிக்க வேண்டும் என பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

3.மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான 4.5 சதவீத உள் ஒதுக்கீடு நல்ல முன்னேற்றம் என்றாலும் அதில் பல்வேறு முரண்பாடுகளும், பின்னடைவுகளும் இருப்பதால் உடனடியாக திருத்தவேண்டும். முஸ்லிம் சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்காத இந்த இட ஒதுக்கீடு தீர்மானமும், நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைச் செய்த ஒ.பி.சி முஸ்லிம்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை கண்டு கொள்ளாததும் அரசியல் தந்திரமாகும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என சில முஸ்லிம் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வது உ.பியிலும், பிற மாநிலங்களிலும் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்கான சூழ்ச்சியாகும்.

 இதுபோன்ற வாக்குறுதிகளை கண்டு முஸ்லிம்கள் ஏமாறமாட்டார்கள். ஏனெனில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து வருகிறார்கள் என்பதை அரசும் இன்னபிற கட்சிகளும் புரிந்துக் கொள்ளவேண்டும்.

ஐ.மு அரசு வார்த்தை ஜாலங்களை நிறுத்திவிட்டு ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான செயலில் இறங்கவேண்டும் என பொதுக்குழு கேட்டுக்கொண்டது.

4.டெல்லி பாட்லா ஹவுஸில் முஸ்லிம் இளைஞர்கள் போலி என்கவுண்டர் மூலம் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது. இவ்வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைப்பதில் காங்கிரஸ் கட்சியே மாறுபட்ட கருத்துக்களால் பிளவுபட்டு நிற்கின்றது. இதனை ஒரு சாதாரண என்கவுண்டராக எடுத்துக் கொள்ளக்கூடாது. முஸ்லிம்களை,குறிப்பாக மாணவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது.

எந்த அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் பேச்சளவில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அறிக்கைகளை விட்டு வருகின்றனர். இவ்வழக்கை உடனடியாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனிதாபிமானமற்ற முறையில் பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

5.ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வதற்கென்று முஸ்லிம் இளைஞர்கள் ‘லவ் ஜிஹாத்’ மூலம் சதி செய்கிறார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹிந்துத்துவா பாசிச சக்திகள் தான் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

 இப்பிரச்சாரத்தின் மூலம் சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து, கலவரத்தை உருவாக்கவும், மேலும் முஸ்லிம் இளைஞர்களை தனிமைப்படுத்தி கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றவும் பாசிச ஹிந்துத்துவா சக்திகள் மேற்கொண்ட சதிதான் ‘லவ் ஜிஹாத்’ அவதூறு பிரச்சாரம் என்பது நிரூபணமாகியுள்ளது. அத்தகைய அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும்,இந்தப் போலி பிரச்சாரத்திற்கு துணை நின்று செய்திகளை புனைந்து வெளியிட்ட மீடியாக்கள் குறிப்பாக டி.வி சேனல்கள் மன்னிப்பு கோருவதுடன் அவர்களுடைய வாசகர்களுக்கு உண்மை என்ன என்பதை தெளிவுப்படுத்தவேண்டும் எனவும் பொதுக்குழு கேட்டுக்கொண்டது.

6.கர்நாடகா மாநிலம் பிஜாப்பூரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி கலவரத்தை தூண்ட திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்களை கர்நாடகா போலீஸ் கைது செய்திருப்பதை வரவேற்கும் பாப்புலர் ஃப்ரண்ட், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க்பரிவாரத்தினர் இதுபோன்ற சதிகள் மூலமாக கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டு வருகின்றனர் என்பதை முன்பே கூறியிருந்தது என்பதை நினைவூட்டியது.

7.கேரள முஸ்லிம் சமூக ஆர்வலர்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களின் மின்னஞ்சல் தொடர்புகளை தடைச் செய்வதற்கு முயற்சி செய்துவரும் கேரள போலீசை பொதுக்குழு வன்மையாக கண்டித்தது. இந்நடவடிக்கை,ஏகாதிபத்திய சக்திகள் சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்த எடுத்துவரும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு ஒப்பானதுபோல் தோற்றமளிப்பதாக பொதுக்குழு கூறியது.

மதசார்பற்ற மற்றும் சிறுபான்மை மக்கள் ஆதரவு அரசு என்று கூறிக்கொண்டு இதுப்போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கேரள அரசை பொதுக்குழு வன்மையாக கண்டித்தது.

8.சாதாரண வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல் ரிமாண்டில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இறுதியில் விடுவிக்கப்படும்போது அவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத்தொகை வழங்கு வகையில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் தேவையான சட்டத்திருத்தம் கொண்டுவர பொதுக்குழு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இப்பொதுக்குழுக் கூட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மானின் துவக்க உரையுடன் துவங்கியது. இறுதி உரையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா நிகழ்த்தினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza