Saturday, January 28, 2012

வரதட்சணைக்காக காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்து

dowry
வேலூர்:வரதட்சணை வாங்குவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் குற்றத்தை தடுப்பதற்காக நிறுவப்பட்டுள்ள காவல்நிலையத்தில் வைத்து வரதட்சணை தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளது காவல்துறையினரின் குற்றத்தை தடுக்கும் லட்சணத்தை பறைசாற்றுகிறது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்தகோணம் பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26-ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4.30 மணிக்கு மணப் பெண்ணுக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இதுகுறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது.

போலீசார், பெங்களூரு சென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், ‘நாட்டறாம் பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக’ கூறினார்.

அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு 25 சவரன் நகைகள் தான்போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக பத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர். “இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்” என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

வரதட்சணை கேட்டு அடம்பிடிக்கும் சதீஷை கைது செய்து வழக்குப் பதிவுச் செய்வதற்கு பதிலாக காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தியதோடு அவரை போக அனுமதித்துள்ளனர். ஆனால் சதீஷின் செயலால் ஆத்திரமடைந்த மணமகள் ப்ரீத்தி “நகைக்காக திருமணத்தை நிறுத்திவிட்டு ஓடியவரை திருமணம் செய்யமாட்டேன்” என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டி அடித்துள்ளார். காவல்துறை செய்யவேண்டிய பணியை ஒருபெண் செய்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza