Saturday, January 21, 2012

தமிழகம்:புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற நீதிமன்றம் தடை

chennainewassemblybuilding
சென்னை:தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் பெரும் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றுவதற்கு சென்ன உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை ஒமந்தூரார் எஸ்டேட்டில் ரூ.1092 கோடியில் கட்டப்பட்ட புதிய தலை¬மைச் செயலகத்தை  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என்று  முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் வீரமணி, உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதிகள் முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து, அரசு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்தும்  அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீத கிருஷ்ணன், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், கட்டடத்தின் உள்பகுதியில் சில மாற்றங்களை செய்வதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை மீண்டும் பெறத் தேவையில்லை என்று வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், மிகப் பெரும் கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றும்போது சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்று குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியது:

கட்டடம் கட்ட ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கட்டட வடிவமைப்பை மாற்றும்போது மீண்டும் ஒப்புதல் பெற வேண்டுமா அல்லது தேவையில்லையா என்பது பற்றி இந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது முடிவு செய்து கொள்ளலாம்.
இப்போதைய நிலையில், கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைப் பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இந்த வழக்கின் முடிவு தெரியும் வரை, புதிய தலைமைச் செயலகக் கட்டத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை மாநில அரசு பெறுவதற்கோ அல்லது அரசின் கொள்கை முடிவின் படி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தடையாக இருக்காது.

இந்த மனு தொடர்பாக பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணை பிப்ரவரி 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza