Wednesday, January 18, 2012

கிலானி மீது வழக்குத் தொடரப்போகும் ஊழல் தடுப்பு ஏஜன்சி

NAB
இஸ்லாமாபாத்:ஊழல் வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ளாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி மீது ஊழல் தடுப்பு ஏஜன்சியும் வழக்குத் தொடர உள்ளது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அத்னான் காஜாவை அரசுக்கு சொந்தமான எண்ணெய்-எரிவாயு வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராக கிலானி நியமித்தது தொடர்பாக நேசனல் அக்கவுண்டபிலிட்டி பீரோ(NAB) வழக்கு பதிவுச்செய்ய ஆலோசித்து வருவதாக த நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த தொடர்பான வழக்கில் 14 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் துறைகளில் சட்டவிரோத நியமனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நேசனல் அக்கவுண்டபிலிட்டி தலைவருக்கு உச்சநீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தது. இச்சூழலில் கிலானி மீது வழக்குத் தொடரப்படும் என NAB அதிகாரிகளை மேற்கோள்காட்டி த நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிலானியுடன் நெருங்கிய தொடர்புடையவர் காஜா. ஊழல் வழக்கில் அண்மையில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் நிறுவன செயலாளர் இஸ்மாயீல் குரைஷி, காஜா நியமனத்திற்கான பொறுப்பு கிலானிக்கும் அவரது முதன்மை செயலாளர் நர்கீஸ் சேத்திக்கும் தான் என NAB விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.

கிலானி சட்டங்களை மீறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிலானி மீதான உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் கிலானி சார்பாக ஆஜராக பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியின் தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான அஹ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். அஹ்ஸனும், கிலானியும் நேற்று வழக்கு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

இதற்கிடையே,பாகிஸ்தான் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி தொடர்பாக அந்நாட்டின் அதிபர் சர்தாரியின் அலுவலகமும், ராணுவமும் பேச்சுவார்த்தையை தொடர்கின்றன. மெமோ விவாதம் தொடர்பாக சர்தாரியும், ராணுவ தளபதி கயானியும் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று உயர் ராணுவ அதிகாரிகள் அதிபர் அலுவலக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza