Thursday, January 19, 2012

ருஷ்டியின் இந்திய வருகை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

salmanrushdie
புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதை தொடர்ந்து ராஜஸ்தான், டெல்லி மாநில போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு தொடர்பான எந்த பிரச்சனையை எதிர்கொள்ளவும், மோதல் சூழல் உருவாகும் வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளிலும் போதுமான போலீஸ் காவலை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் இலக்கிய திருவிழாவில் கலந்துக்கொள்ள சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ருஷ்டி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

ருஷ்டி வரும் தினங்களில் இந்தியாவுக்கு வருவார் என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கை சுட்டிக்காட்டுகிறது. ருஷ்டியின் வருகை பிரச்சனைகளை உருவாக்கும் என முன்னர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம்
தெரிவித்திருந்தார்.

இலக்கிய திருவிழாவின் அமைப்பாளர்கள் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலில் ருஷ்டியின் பெயர் இல்லை. இக்காரணங்களை சுட்டிக்காட்டி ருஷ்டி ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் கலந்துக்கொள்ள மாட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ருஷ்டி இந்தியா வருவதற்கு விசா அனுமதிக்க கூடாது என தேவ்பந்த் துணைவேந்தர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவர் இந்திய வம்சாவழியை சார்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கு வருகை தர அவருக்கு விசா தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது. அதேவேளையில், சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் சூழல் ஏற்பட்டால் அவரது வருகையை ரத்துச்செய்யலாம் என சுட்டிக் காட்டப்பட்டது.

இலக்கிய திருவிழாவின் அமைப்பாளர்களின் தலைவர் சஞ்சோய் கெ.ராய் கூறுகையில், முன்னர் திட்டமிட்டபடி ஜனவரி 20-ஆம் தேதி ருஷ்டி இந்தியாவுக்கு வரமாட்டார் என்றும், ஆனால் அவரது அழைப்பை ரத்துச் செய்யவில்லை என்றும் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza