பொலாம்கீர்:ஒரிஸ்ஸா(ஒடீஸா) மாநிலத்தில் பொலாம்கீர் மாவட்டத்தில் உள்ள லாத்தோர் கிராமத்தில் உயர்ஜாதியினர் தலித்துகளின் 30 குடிசைகளை தீக்கிரையாக்கினர்.
உயர் ஜாதியைச் சார்ந்த இரண்டு இளைஞர்களுக்கும், தலித் சமூகத்தைச் சார்ந்த 2 இளைஞர்களுக்கும் இடையே நடந்த தகராறு தீவைப்பில் முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு தலித் சிறுவன் துணிக்கடையில் இருந்து ஷர்ட்டை திருடினான் என குற்றம்சாட்டி இரு தரப்பினரிடையே மோதல் உருவானதாக டி.ஜி.பி மனோமோகன் ப்ரஹராஜ் கூறினார்.
ஐம்பது பேர்கள் அடங்கிய உயர் ஜாதியைச் சார்ந்த கும்பல் ஒன்று தலித்துகள் வசிக்கும் பகுதியில் அத்துமீறி நுழைந்து குடிசைகளுக்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். பெண்களையும், குழந்தைகளையும் வன்முறையாளர்கள் இழுத்து வெளியே போட்டனர். தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் வருவதை தடுக்க சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அப்பகுதிக்கு தீயை அணைக்க வந்த தீயணைப்பு படையினர் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது உயர்ஜாதிக் கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீகாந்த் மிஷ்ரா கூறுகிறார்.
தாக்குதலை தடுக்க வந்த போலீசாரையும் வன்முறைக் கும்பல் சம்பவ இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என மிஷ்ரா கூறுகிறார். தீயணைப்பு படையினரின் வாகனங்களை சேதப்படுத்தியதுடன், தண்ணீர் குழாய்களை உடைத்துள்ளனர்.
இச்சம்பவம் துயரமானது என முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தீவைப்புச் சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீக்கிரையான குடிசைகளில் வாழ்ந்த தலித்துகளுக்கு தற்காலிக வசிப்பிட முகாம்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். தலித்துகளின் குடிசைகளை தீவைத்துக் கொளுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் 120 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வசிக்கும் தற்காலிக முகாமிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என டி.ஜி.பி தெரிவிக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுச் செய்யக்கோரி தேசிய மனித உரிமை கமிஷனுக்கு ஒரிஸ்ஸா மாநில சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. தாக்குதலை தடுக்காமல் கடமையைச் செய்ய தவறிய போலீஸார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் சமாஜ்வாதி கட்சியின் ஒரிஸ்ஸா மாநில தலைவர் ரபி பெஹேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment