Wednesday, November 23, 2011

பஸ் கட்டணம் உயர்வு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

imagesCAQH6BR7
சென்னை:பஸ் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டது ஏன் என்பது குறித்து 3 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் புகழேந்தி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  தனித்தனியே  மனு தாக்கல் செய்தனர். அதில்  கூறியிருப்பதாவது:

‘சென்னையில் மட்டும் 55 லட்சம் பேர் அரசு பஸ்சில் பயணம் செய்கிறார்கள்.  திடீரென்று முன் அறிவிப்பு இல்லாமல் கட்டணம் உயர்த்தியது சட்டவிரோதமானது.  பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்பிறகு தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அந்த நடைமுயையை அரசு பின்பற்றவில்லை. கட்டண உயர்வினால் தமிழகம் முழுவதும் தினமும் பயணம் செய்யும் 2.5 கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். புகழேந்தி சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பஸ் கட்டண உயர்வுக்கு  தடை விதிக்க வேண்டும்; எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு சட்டப்படி தெரியப்படுத்த வேண்டும். அதை கூட அரசு செய்யவில்லை’ என்றார்.

தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, எந்த தடையும் விதிக்கக்கூடாது, இதுதொடர்பான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன், கெசட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது , இதில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே தற்போதுள்ள விலை உயர்வை கருதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டது? எத்தனை சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, எந்த காரணத்துக்காக உயர்த்தப்பட்டது? டீசல் விலை உயர்வினால் உயர்த்தப்பட்டதா? இது குறித்து 3 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், இந்த கட்டண உயர்வை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு, பத்திரிகைகளில் வெளியிடவேண்டும் என உத்தரவிட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza