Saturday, September 24, 2011

தேனிலவு முறிந்தது:அதிமுக-தேமுதிக உறவில் விரிசல்

vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands
சென்னை:தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் பலவிதமான பிரச்சனைகளுக்கு பின் இருக்கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தது, அமோக வெற்றியும் பெற்றது.

இப்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கூட்டணி கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்காமல், ‘அம்மையார்’ அனைத்து  இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து அனைவருக்கும் அதிரடி ‘ஷாக்’ அளித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன தேமுதிக பலவித முயற்சிகளையும் எடுத்துப் பார்த்தது. எதுவும் பயனளிக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக இப்போது அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி, தனியாகவே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற குதிரையில் ஏறி ஜம்மென்று சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் இப்போது ஏற்றிய இடத்திலேயே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அதிமுக. இதற்குப் பெயர்தான் சிங்காரித்து மூக்கறுப்பதென்பது!

எனவே முன்பைக் காட்டிலும் பெரும் நெருக்கடி விஜயகாந்துக்கு. இந்த முறை தனது செல்வாக்கை அவர் நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயம். காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், ஒரேயடியாக வாக்காளர்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயமும் அவருக்கு உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு கருத்தைக் கூட எந்தப் பிரச்சினையிலும் அவர் முன் வைத்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நைஸாக அதிமுகவிடம் அதிக சீட் பெறுவதுதான் அவர் நோக்கமாக இருந்தது.

இதைப் புரிந்து வைத்திருந்த முதல்வர், ஆரம்பத்திலேயே தட்டி வைக்க நினைத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை!

இவர்களது இந்த கூட்டணி தேனிலவு வெகு சீக்கரத்தில் முடிவுக்கு வந்துள்ளதை அரசியல் நிபுணர்களும் பொதுமக்களும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza