Sunday, September 11, 2011

வன்முறை செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்

imagesCAD85IPO
சென்னை:பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும் என்றும், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் கைது செய்தனர். ஜான் பாண்டியன் கைதினைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி நகர போக்குவரத்தினை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர்.

இதனையடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, வன்முறைக் கூட்டம் கலைந்தது. மேலும், இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் சந்தீப் மிட்டல், பரமக்குடி நகர காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன், காவல் துறை ஆய்வாளர் அதிசயராஜ் மற்றும் பல காவலர்கள் காயமடைந்தனர்.

ஜான் பாண்டியன் கைதினை எதிர்த்து மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடை௯று ஏற்படுத்தினர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மீது கல் எறிந்தனர். அதன் காரணமாக மூன்று காவலர்கள் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளரை தாக்க முற்பட்ட போது, தற்காப்புக்காக ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவருக்கு சாதாரண காயம் ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வன்முறைச் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza