மும்பை:அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. அந்த பதவிக்கு ஆளும் கூட்டணியின் வேட்பாளராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அன்னாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் புனேயில் இருந்து வெளியாகும் மராத்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா வருவாய்த் துறை அமைச்சர் பாலா சாகேப் தோரட், அகமத்நகர் காங்கிரஸ் எம்.பி. பாவு சாகேப் வாக்சவுரே, முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் விஜய்சிங் மொகிதே பாட்டீல் ஆகியோர் கடந்த சில தினங்களாக அன்னாவை ராலேகான் சித்தியில் சந்தித்து பேசியதை அந்த பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது.
‘ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் அன்னா 12 நாள் உண்ணாவிரதம் இருந்தபோது, நாடு முழுவதும் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவை தனக்கு சாதகமாக்க, அன்னாவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை அன்னா தலைமையிலான ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர். ஒருவேளை, காங்கிரசுக்கு அப்படி ஒரு திட்டம் இருந்தாலும், அன்னா அதை ஏற்க மாட்டார் என்றும் அவர்கள் கூறினர்.
0 கருத்துரைகள்:
Post a Comment