டெல்லி:பட்டோடி 20-வது வயதில் கார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்தார். அதன்பிறகு, இதுவரை 1.5 லட்சம் பேருக்கு பார்வைக் கிடைத்திட அவர் உறுதுணை புரிந்ததுடன், இறப்புக்கு முன்பு கண் தானம் செய்து தனது சேவையைத் தொடர்ந்தது நெகிழ்வுக்குரியது.
டெல்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை மரணமடைந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் உடல் அவரது சொந்த ஊரான பட்டோடி கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, தாம் உயிர் பிழைப்பது கடினம் என்று உணர்ந்த பட்டோடி மரணப் படுக்கையில் இருந்தபடி, தனது கண்ணை தானம் செய்ய முன்வந்தார். அவர் விருப்பப்படி, டெல்லியில் உள்ள ‘வேணு ஐ இன்ஸ்டிட்யூட்’டுக்கு அவரது கண் தானமாக வழங்கப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் பட்டோடி நல்லெண்ணத் தூதராக இருந்து வந்த அந்த இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாகி அளித்த பேட்டியில், “இந்த மையத்தில் மாதம்தோறும் 400 முதல் 500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். பட்டோடி கடந்த 20 ஆண்டுகளாக உண்மையான நல்லெண்ணத் தூதராக இருந்தார். இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு பார்வை கிடைக்க அவர் உறுதுணை புரிந்துள்ளார்,” என்றார் நெகிழ்வுடன்.
கண் சிகிச்சை முகாம்கள், கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என எதையும் பட்டோடி தவறவிட்டதில்லை என்று நினைவுகூர்ந்தார் அந்த நிர்வாகி.
0 கருத்துரைகள்:
Post a Comment