போபால்:போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு நிறுவிய போபால் மெமோரியல் அண்ட் ரிசர்ச் செண்டர் நோயாளிகளிடம் சட்டவிரோத மருந்துகளை பரிசோதனை நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கு சிகிட்சை பெற்ற விஷவாயு விபத்தில் பாதிப்பிற்குள்ளான 80 சதவீத நோயாளிகளிடமும் அநியாயமாக சட்டவிரோதமான மருந்தை பரிசோதனைச் செய்த விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது.முன்னர் எழுப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை உறுதிச் செய்கிறது. போபாலில் விரிவான வசதிகளுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையில்தான் இந்த அக்கிரமம் நிகழ்ந்துள்ளது. இங்கு சிகிட்சைக்காக வந்த 279 நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடந்துள்ளது. இதில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள். மருந்து பரிசோதனையில் 34 பேர் மரணித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனை இயக்குநர் பிரிகேடியர் கெ.கெ.மவ்தர் துணை மருத்துவ கட்டுப்பாட்டாளர் டாக்டர்.ராமகிருஷ்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் மருந்து பரிசோதனையை உறுதிச்செய்யும் விபரங்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ மனையில் நான்கு பிரிவுகளில் மருந்து பரிசோதனை நடந்துள்ளது. இதயநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 160 நபர்கள் உள்பட 218 நோயாளிகளுக்கும், ஜி.எ அறுவை சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 45 போபால் விஷவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 49 நோயாளிகளிடமும், நுரையீரல் நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 49 பேர்களிடமும், அனஸ்தீஸியா பிரிவில் 7 பேர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மருந்து பரிசோதனை குறித்து கடந்த ஆண்டு அறிக்கைகள் வெளியான பிறகும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை மறுத்தனர். மருந்து பரிசோதனை குறித்து தகவல் கிடைக்கவில்லை என மருத்துவமனையில் ஹெல்த் சர்வீஸ் இயக்குநர் ஜெனரல் கூறுகிறார். ஆனால், மருந்து பரிசோதனையின் மூலமாக மரணித்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இந்தியாவில் மருந்து பரிசோதனை துறையில் ஏறத்தாழ 3000 கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:
Post a Comment