புதுடெல்லி:ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேர்மனும், மேனேஜிங் டைரக்டருமான அரவிந்த் ஜாதவ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.விமானப் போக்குவரத்து துறை இணை செயலாளர் ரோஹித் நந்தன் தற்காலிகமாக இப்பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானிகளின் போராட்டம் மற்றும் ஏர் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் ஜாதவ் தோல்வியடைந்தார் என கூறி இந்த பதவி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா பெரும் கடன் சிக்கலில் மாட்டியதை தொடர்ந்து 40 ஆயிரம் பணியாளர்களின் ஜுன், ஜூலை மாதங்களின் சம்பளமும், ஏப்ரல் மாத படிகளும் வழங்கவில்லை. கடந்த நிதியாண்டில் 7000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏர் இந்தியா சந்தித்தது. விமானிகளின் போராட்டம் காரணமாக நஷ்டம் மேலும் அதிகரித்தது. ஏர் இந்தியாவை கடன் சிக்கலில் இருந்து மீட்கவும், விமானிகளின் போராட்டத்தை சமரசமாக பரிகாரம் காணவும் சி.எம்.டி என்ற நிலையில் ஜாதவ் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
ஜாதவிற்கு பதிலாக இப்பதவியை ஏற்கும் ரோஹித் நந்தன் 1983 ஆம் ஆண்டைய ஐ.ஏ.எஸ் பாட்ச் அதிகாரியாவார். 2009 டிசம்பர் முதல் விமானப் போக்குவரத்துறை இணை இயக்குநராக இவர் பணியாற்றி வருகிறார். விமானப் போக்குவரத்துறை செயலாளர் நஸீம் ஸெய்திதான் ஏர் இந்தியா சி.எம்.டி பதவிக்கு நந்தன் ரோஹித்தை பரிந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இதற்கு அனுமதி வழங்கியது.

0 கருத்துரைகள்:
Post a Comment