கெய்ரோ:வெளியேற்றப்பட்ட முன்னாள் எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் மீதான நீதிமன்ற விசாரணையின் காட்சிகளை இனி கேமராவில் பதிவுச்செய்ய தடை விதித்து விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையின் முதல் இரண்டு தினங்கள் காட்சிகளை பதிவுச்செய்ய தேசிய தொலைக்காட்சியை அனுமதித்தது சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது விருப்பத்தை கவனத்தில் கொண்டு நீதிமன்ற அறையில் கேமராவை தடைச்செய்வதாக நீதிபதி அஹ்மத் ரிஃபாத் தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் நடவடிக்கையை குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். இந்த உத்தரவு விசாரணையில் கூடுதல் கவனம் செலுத்த வழக்கறிஞர்களுக்கு உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். பல வழக்கறிஞர்களும் தொலைக்காட்சியில் தோன்றவே நீதிமன்றத்திற்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னர் நீதிமன்றம் முபாரக் மற்றும் முபாரக் அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரின் விசாரணையை செப்டம்பர் ஐந்தாம்தேதிக்கு ஒத்திவைத்தது. ஜனநாயகரீதியில் போராடியவர்களை ராணுவத்தின் மூலம் கொலைச்செய்ய முயற்சித்தார் என்பது இவர்மீதான முக்கிய குற்றமாகும்.நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் முபாரக்கை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வீல்செயரில் கொண்டுவருகின்றனர். முபாரக்கின் இருமகன்களும் ஊழல் விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment