புதுடெல்லி:ஜனலோக்பால் மசோதாவிற்காக அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது தினத்தை எட்டிய வேளையில் ஹஸாரேவின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் சமூக தீர்விற்கு வழி ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
அதேவேளையில், ஹஸாரேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு ஹஸாரேயை மாற்றுவதற்கு டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டபோதிலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. குளுக்கோஸ் ஏற்றுவதற்கும் அவர் மறுத்துவிட்டார். மரணம் வரை நோக்கத்தை அடையும்வரை போராடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். தனது ஒரு சிறுசீரகம் மோசமடைந்தால் இன்னொன்றை தானமாக அளிக்க ஆட்கள் தயாராக இருப்பார்கள். தன்னை பலம் பிரயோகித்து மருத்துவமனையில் அனுமதிக்க அரசு முயற்சித்தால் அதனை தடுக்கவேண்டும் என ஹஸாரே அழைப்புவிடுத்துள்ளார்.
நேற்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீட்சித்தின் இல்லத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை ஹசாரே குழுவின் உறுப்பினரான அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார்.
இந்த 8 நாள்களில், இரு தரப்புக்கும் இடையே நேரிடையாக நடந்த முதல் பேச்சுவார்த்தை இது. பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமரின் உத்தரவின்பேரில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஹஸாரே குழுவினருடன் நார்த் ப்ளாக்கில் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தையை தொடர்ந்தார். பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாகவும், தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் பின்னர் பிரணாப் அறிவித்தார்.
பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு அரசு ஆதரவான கருத்தை தெரிவித்ததாக கருதப்படுகிறது. நீதிபதிகள் விவகாரத்தில் இன்னொரு சட்டத்தை கொண்டுவரவும் முடிவானது.
இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி பிரதமர் மன்மோகன்சிங் அன்னா ஹஸாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்களைவை தலைவர் அனுமதி அளித்தால் ஜனலோக்பால் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அளிக்கலாம் என கடிதத்தில் பிரதமர் உறுதியளித்துள்ளார். இதற்காக அரசு மக்களவை தலைவருடன் விவாதிக்கும். அன்னாவின் உடல்நிலையைக் குறித்து கவலை உள்ளதாக பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அளிக்கவேண்டும் என்ற வாக்குறுதியை ஹஸாரே குழுவினர் நிராகரித்துவிட்டனர்.
இப்பிரச்சனைக் குறித்து பிரதமர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment