டமாஸ்கஸ்:அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் அடக்குமுறை கொள்கைக்கு எதிராக நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சிரியாவின் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.
தர்ஆ, லதாக்கியா, ஹம்ஸ், டமாஸ்கஸில் மிதான் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன.
ஈராக் எல்லையையொட்டிய தீர் அஸ்ஸூர் நகரத்தில் நான்கு லட்சம் பேர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அமுதா, தெர்பாஸியா, ராஸலைம் ஆகிய குர்து மக்கள் வாழும் பகுதிகளில் எதிர்ப்பு தீவிரமடைந்தது. காமிஷியில் எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. பல்வேறு நகரங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் மரணித்துள்ளனர்.
தலைநகருக்கு அடுத்துள்ள தராயா, துமா ஆகிய இடங்களில் தொலைபேசி, மின்சாரம் ஆகியவற்றின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமைக்கு பிறகு ஹம்ஸில் 22 பேர் கொல்லப்பட்டனர். ஹம்ஸில் ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர கோரி நேற்று நடைப்பெற்ற பேரணிகளில் முழக்கமிடப்பட்டன. ஹம்ஸில் ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி அறிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment