மும்பை/புதுடெல்லி:நேற்று முன்தினம் மாலையில் மும்பை தாதர், ஜவேரி பஸார், ஓபரா ஹவுஸ் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை குறித்த விசாரணை வரம்பிற்குள் இந்தியாவுக்கு விரோதமாக செயல்படும் அனைத்து அமைப்புகளையும் உட்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:இந்தியா-பாக்.செயலாளர் அளவிலான பேச்சுவார்த்தையை தடுக்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்கமுடியாது.
தாக்குதலுக்கு பின்னணியில் யார்? செயல்பட்டார் என்பதை தற்போது கூறவியலாது. மத்திய-மாநில உளவுதுறைகள் மீது தவறு இல்லை. உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய நாடுகள்தாம் இந்தியாவுக்கு அண்டைநாடுகளாக உள்ளன. ஆகவே நாட்டின் அனைத்து நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
டைமர்கள் உபயோகித்து நாட்டு வெடிக்குண்டுகள் இந்த குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் இருந்து முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு மஹாராஷ்ட்ரா அரசு ஐந்து லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் அளிக்கப்படும். காயமடைந்தவர்களின் சிகிட்சை செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அறிவித்துள்ளார். கடுமையான காயமுற்றவர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என பிரதமரின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் மும்பைக்கு வருகைதந்தனர். முதல்வர் பிரதிவிராஜ் சவான், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் நடப்பதை தடுப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தபிறகு இருவரும் இரவிலேயே டெல்லி திரும்பினர். சந்தேகத்திற்குரிய அனைவரையும் கண்காணித்துவருகிறோம்.சம்பவத்தின் அனைத்து புறங்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம். எல்லை கடந்த தீவிரவாதம் இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளதை நிரூபிக்கும் எவ்வித ஆதாரங்களும் சிக்கவில்லை.
எந்த அமைப்பு குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டது என்பது கூறவியலாது என உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment