டமாஸ்கஸ்:வெள்ளிக்கிழமை அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
20 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் வீதியில் இறங்கிய தலைநகரான டமாஸ்கஸில் துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் மாதம் போராட்டம் துவங்கியதிலிருந்து அதிகமான மக்கள் பங்கேற்ற பேரணிதான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நல்லிணக்கத்திற்காக அரசு தேசிய அளவிலான பேச்சுவார்த்தையை துவக்கினாலும், அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் ராஜினாமா செய்யாமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹுஸ், ஹமா, தர்ஆ, தீர் அன்ஸூர், இத்லிப், பாபூன் உள்ளிட்ட நகரங்களில் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் ஆஸாதின் ராஜினாமாவைக்கோரி பேரணி நடத்தினர். இத்லிப், துமா ஆகிய இடங்களில் 3 பேரும், தர்ஆ, ஹுஸுலில் இரண்டுபேரும் கொல்லப்பட்டதாக தன்னார்வ தொண்டர்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில், சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதை வெளியேற்றக் கோருவது தொடர்பான விவகாரங்களை விவாதிக்க 350 எதிர்ப்பாளர்களின் தலைவர்கள் துருக்கியின் இஸ்தான்புல்லில் கூடினர். சிரியாவில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்த பிறகு எதிர்ப்பாளர்களின் நேசனல் ஸால்வேஷன் காங்கிரஸின் மாநாடு துவங்கியது.
சிரியாவின் சட்டங்களை மீற அவர்கள் அழைப்பு விடுத்தனர். சொந்த நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதை ஆஸாதின் அரசு நிறுத்தவேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் துருக்கியில் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment