ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலநகர வீதிகள் தோறும் குழுமிய நூற்றுக்கணக்கான யூத ஆக்கிரமிப்பாளர்கள், இஸ்ரேலியக் கொடிகளைக் கைகளில் தாங்கி, 'அரபுகள் சாகட்டும்!' என ஆக்ரோஷமாகக் கோஷமிட்டவர்களாக அணிவகுத்துச் சென்ற சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் முழுப் பாதுகாப்போடு கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யூத ஆக்கிரமிப்பாளர்கள் தமது அரபு எதிர்ப்பையும் யூத இன உணர்வையும் பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (01.06.2011) மாலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் ஒன்றுகூடிய யூத ஆக்கிரமிப்பாளர்கள், 1967 ஆம் ஆண்டு பலஸ்தீனர்களிடமிருந்து கிழக்கு ஜெரூசலமும் மேற்குக் கரையும் இஸ்ரேலினால் பலவந்தமாக ஆக்கிரமித்துக்கொண்ட நினைவு தினக் கொண்டாட்டத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
பலஸ்தீனர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையிலான சலோகங்களை முழக்கமிட்டபடி ஆக்கிரமிப்பாளர்கள் அட்டகாசமாக ஆடிப்பாடிக் கொண்டு ஜெரூசல நகர வீதிகளில் வலம் வந்தனர். இதன்போது, பலஸ்தீன் இளைஞர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. இதையடுத்து, ஷெய்க் ஜர்ராஹ் பகுதியில் உள்ள ஐந்து பலஸ்தீன் இளைஞர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறை கைதுசெய்தது.
யூத ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்பு நினைவு தினக் கொண்டாட்டத்தையொட்டி ஜெரூசல நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புனித நகரின் பல்வேறு வீதிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மூடப்பட்டிருந்தன. நகரெங்கிலும், குறிப்பாக அல் அக்ஸா பள்ளிவாயில், இஸ்ரேலியப் பிரிவினைச் சுவர் என்பவற்றை அடுத்துள்ள பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். யூதக் குடியேற்றவாசிகளால் இத்தகைய ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் முன்னெடுக்கப்படுவதும், அவர்களுக்குப் பலத்த இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளே என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசல நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யூதக் குடியேற்றங்களின் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துதல், ஜெரூசலத்தின் எந்த ஒரு சிறு பகுதியையும் பலஸ்தீனர்களிடம் கையளித்தல் என்பவற்றுக்கு பெரும்பாலான இஸ்ரேலியர்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேலிய சானல்-1 மேற்கொண்டுள்ள கருத்துக் கணிப்பில், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரம் சர்வதேச கண்காணிப்பின்கீழ் இருப்பதை 73 சதவீதமான இஸ்ரேலியர்கள் வெறுக்கிறார்கள். பலஸ்தீன் ஒரு சுதந்திர தேசமாக இயங்குவதையோ, இஸ்ரேல் தற்போது ஆக்கிரமித்துள்ள பலஸ்தீன் பிராந்தியங்களில் இருந்து ஒரு துண்டு நிலத்தையேனும் பலஸ்தீனர்வசம் திருப்பிக் கையளிக்கப்படுவதையோ 66 சதவீதமான இஸ்ரேலியர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment