சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 50, டீசல் லிட்டருக்கு ரூ 3, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2 என்ற விகிதத்தில் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கூடி விலை உயர்வு குறித்து விவாதித்து அதற்கு ஒப்புதல் தந்தது. அதன் பிறகு விலை உயர்வு தொடர்பான இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விலையேற்றம் தொடர்பாக மத்திய பெட்ரோலியம்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, "எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பைக் குறைக்கவே விலை உயர்த்தப்படுகிறது." என்று தெரிவித்தார்.
மேலும், "இந்த விலை உயர்வு காரணமாக கூடுதலாக ரூ.21,000 கோடிதான் கிடைக்கும். அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ரூ.1,71,140 கோடியாகும்.
இந்த விலை உயர்வு மிகவும் குறைவானது, அனைவராலும் தாங்கக்கூடியதே. அதே வேளையில் சில பெட்ரோலியப் பண்டங்கள் மீதான சுங்கத் தீர்வையும் உற்பத்தி வரியும் குறைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பெட்ரோலியப் பண்டங்கள் உற்பத்திக்கும் மூலப் பொருளாகத் திகழும் கச்சா பெட்ரோலியத்தின் மீதான சுங்க வரி 5% குறைக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு முழு நிதி ஆண்டில் ரூ.26,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். டீசல் மீதான உற்பத்தி வரி ஒரு லிட்டருக்கு ரூ.4.60 ஆக இருப்பது ரூ.2 ஆகக் குறைக்கப்படுகிறது. இதனால் 2011-12-ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.23,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
சிறப்பு உற்பத்தி வரி, கூடுதல் உற்பத்தித் தீர்வை ஆகியவை மத்திய சாலை வளர்ச்சி நிதிக்காகவும் கல்விச் செலவுகளுக்கான கூடுதல் தீர்வையாகவும் வசூலிக்கப்படுவதால் அவற்றைக் குறைப்பது இயலாது." என்று தெரிவித்தார்.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 5 உயர்த்திய ஒரு மாத காலத்துக்குள் சமையல் கேஸ் முதலான அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி டீசல் லிட்டர் ரூ 40.17 ற்கும் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ 11.50 ற்கும் கேஸ் சிலிண்டருக்கு ரூ 352.35 ற்கும் விற்கப்படுகிறது. இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு விலை ரூ 402.35 ற்கும் டீசல் ரூ 43.17 ற்கும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு 13.50 க்கும் விற்கப்படும்.
இந்த விலை உயர்வு நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. மக்களின் அத்தியாவசிய எரிபொருளான சமையல் கேஸின் சுமார் 14 சதவீத அதிரடி விலை உயர்வு பொதுமக்களிடையே மிகப்பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment