Friday, June 17, 2011

சமச்சீர் கல்வி - 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு!

சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி புதிதாக பதவி ஏற்ற தமிழக அரசு நிறுத்தி வைத்தது. சட்டசபையில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசின் சட்ட திருத்த  முன்வரைவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.  இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதீமன்றம் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும் மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி நிபுணர் குழு ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:

தலைமைச் செயலாளர் சாரங்கி - தலைவர்
ஜி.பாலசுப்பரமணியன் - மாநில அரசுப் பிரதிநிதி (முன்னாள் கல்வி இயக்குநர்)
விஜயலட்சுமி சீனிவாசன் - மாநில அரசுப் பிரதிநிதி (முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன்)
ஜெயதேவ் - கல்வியாளர் (டி.ஏ.வி. கல்விக் குழுமங்களின் நிறுவனர்)
திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி - கல்வியாளர் (முதல்வர், பத்மா சேஷாத்ரி)
பேராசிரியர் பி.கே. திரிபாதி - தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனப் பிரதிநிதி
பேராசிரியர் அனில் சேத்தி - தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனப் பிரதிநிதி
பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர்
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்

இன்று மாலையே இந்த குழுவின் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இவர்கள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

இந்த அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு உயர் நீதிமன்றம் முடிவை அறிவிக்கும்.   ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த இரு வகுப்புகளுக்கும் 18 லட்சம் பாடப் புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன. இந்த பாட புத்தகங்களின் பின்பக்க அட்டையில் செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவ படம் மற்றும் இலக்கிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பக்கத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 6ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றையும் நீக்கி விட்டு வழங்க முடிவு செய்துள்ளது.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza