சுமார் 2500 பெண்களிடம் மோசடி செய்ததாக அறக்கட்டளை ஒன்றின் நிர்வாகியை ஆரல்வாய்மொழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி வீராணமங்கலத்தில் சுமார் 6 மாதங்களாக ஸ்ரீ ஆதவன் என்ற அறக்கட்டளை செயல்பட்டு வந்தது.
இந்த அறக்கட்டளை மூலம் அப்பகுதி பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சியும், தாழக்குடி, பூதப்பாண்டி, இறச்சகுளம், புத்தேரி, துவரங்காடு, தோவாளை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த சுமார் 167 சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை தொழிற்கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டது.
ஆனால் கடன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியரை சிறைபிடித்தனர். இந்த மோசடியில் சுமார் 2500 பெண்கள் வரை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தோவாளைபுதூர் பார்வதி, சாந்தி உள்ளிட்டோர் கொடுத்த புகார் அடிப்படையில் அலுவலக உதவியாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். அறக்கட்டளை நிர்வாகி ரூபன் தலைமறைவானார். இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் ராஜராஜன் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது வெளியூருக்குத் தப்ப முயன்ற அறக்கட்டளை நிர்வாகி ரூபன் என்பவரை கைது செய்தார். இவர் நாகர்கோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஆவார். மோசடி குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment