Monday, May 30, 2011

ஊடகவியலாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

கடந்த வெள்ளிக்கிழமை (28.05.2011) மாலை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ராஸ் அல் அமூத் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஊடகவியலாளர்கள் சிலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இந்த அடாவடிச் செயலை பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.

பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராஸ் அல் அமூத் பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் சட்டவிரோதக் குடியேற்றங்கள், பலஸ்தீன் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்குத் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் பலஸ்தீனர்களின் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மேற்படி ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

 இதனால், செய்தியாளர் தியாலா ஜுவைஹானும், படப்பிடிப்பாளர்களான சுலைமான் காதர் மற்றும் அதா உவைஸாத் ஆகியோரும் படுகாயமடைந்துள்ளனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமக்கு விருப்பமான எந்த ஒரு நிகழ்வையும் பற்றிச் செய்தி சேகரிக்கும் உரிமை எந்த ஒரு ஊடகவியலாளருக்கும் உள்ளது. அதனைத் தடுத்து நிறுத்த முனைவது மனித உரிமை மீறலாகும். இங்கு ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குற்றச் செயல்களை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே மேற்படி ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் தாக்கப்பட்டுள்ளனர். நிச்சயமாக இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகளை நோக்கி உலகின் கவனம் திரும்பவேண்டும்" என்று தனது அறிக்கையில் ஊடகவியலாளர் பேரவை சுட்டிக்காட்டியிருந்தது.

அதுமட்டுமன்றி, பலஸ்தீன் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் தாக்கப்படுவதையும் படுகொலை செய்யப்படுவதையும் தடுத்துநிறுத்தும் வகையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும் தம்மால் இயன்ற அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களையும் ஊடகவியலாளர் சங்கங்களையும் நோக்கி பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza