Sunday, May 15, 2011

ஏழைகளுக்கு 50 லட்சம் டன் தானியங்கள் வழங்கவேண்டும்-உச்சநீதிமன்றம்

220508supremecourt313
புதுடெல்லி:நாட்டில் 150 ஏழ்மையான மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 லட்சம் டன் தானியங்கள் அனுமதிக்கவேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரேசன் அட்டைகள் மூலமாக இவை கோடைகாலத்தில் வறுமையில் வாடுபவர்களுக்கு விநியோகிக்கவேண்டுமென தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி டி.பி.வாத்வாவின் தலைமையிலான கமிட்டியின் மேற்பார்வையில் தானியங்கள் விநியோகிக்கவேண்டுமென உச்சநீதிமன்ற பெஞ்ச் தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக நாட்டில் அதிகரித்துவரும் மரணங்கள் கவலையை ஏற்படுத்துவதாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.உணவுக்கிடங்குகள் நிறைந்து உணவு தானியங்கள் கெட்டுப்போனபிறகும் அரசு ஏன் உணவு தானியங்களை விநியோகிக்கவில்லை என மீண்டும் உச்சநீதிமன்ற பெஞ்ச் கேள்வி எழுப்பியுள்ளது.

பஞ்சாபில் சமீபத்தில் பொது விநியோக உணவு தானியங்கள் பெருமளவில் கெட்டுப்போனதை சுட்டிக்காட்டி மக்கள் சிவில் உரிமை கழகம்(பி.யு.சி.எல்)சமர்ப்பித்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.முன்னர் அனுமதிக்கப்பட்ட உணவு தானியங்களை விநியோகித்த பிறகு கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை விநியோகிக்கவேண்டுமென அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநிலங்கள் பெரும் செலவு செய்து உணவு தானியங்களை சேகரிக்கின்றன.

ஆனால், கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை.எல்லா காலங்களிலும் இச்சூழல்தான் நிலவுகிறது.ஆதலால், உணவு தானியங்களை விரைவாக விநியோகிக்கவேண்டுமென நீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.

ஊட்டச்சத்து குறைவின் காரணமாக வருடத்தில் 3000 பேர் மரணிக்கின்றனர்.3000 அல்ல 3 மரணங்கள் சம்பவித்தாலும் கூட இந்தியா போன்றதொரு நாட்டில் இது கடுமையான பீதியை ஏற்படுத்தக்கூடியது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza