Friday, April 15, 2011

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்துலஞ்ச ஒழிப்புத்துறை விலக்கு கோர முடியாது:ஐகோர்ட் உத்தரவு

சென்னை:""தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை விதிவிலக்கு கோர முடியாது,'' என, சென்னை ஐகோர்ட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஊழல் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை, எவ்வளவு பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது, எத்தனை போலீஸ் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர், பிடிபட்ட போலீசாரின் பெயர், பதவி, போன்ற விவரங்களை அளிக்குமாறு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன், மாதவ் கோரினர். அவர்கள் கோரிய தகவல்கள் அளிக்கப்படவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பொருந்தாது என, அதன் எஸ்.பி., கடிதம் அனுப்பினார். ஆனால், இருவர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில தலைமை தகவல் பெறும் உரிமைச் சட்ட கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி., மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், சசிதரன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அந்த அரசாணை செல்லும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தகவல்கள் கேட்டால் அதற்கு இந்த அரசாணை பொருந்தாது என்றும், லஞ்ச ஒழிப்புத் துறை விலக்கு கோர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழல் தொடர்பான விவரங்களை தான் இருவரும் கேட்டுள்ளனர். எனவே, இந்த அரசாணை இதற்கு பொருந்தாது. தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.தகவல் பெறும் உரிமை, அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, பொறுப்பை கொண்டு வருவதற்கு சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஊழல் குறைப்பு, திறமையை ஊக்குவிப்பது, ஜனநாயகத்தில் பொது மக்களை பங்கு பெறச் செய்வது தான் முக்கியமானது.
இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza