Thursday, April 28, 2011

ஆ.ராசா பிரதமரை தவறாக வழிநடத்தினார் – பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை

PMrajastorynew295
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. ஊழலில் பிரதமரை குற்றஞ்சாட்டாத அறிக்கையில் பிரதமரின் அலுவலகம் குறித்து கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல்புரிய ஆ.ராசாவுக்கு துணைபோகும் வகையில் பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது என அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரதமரை தவறாக புரியவைத்துள்ளார். ஊழலில் ஆ.ராசாவின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் உள்ளன எனக்கூறும் அறிக்கை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாத கேபினட் செயலாளரையும் குற்றஞ்சாட்டியுள்ளது.

காரியங்களை கவனமாக பரிசீலிக்காமல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாட்டாவின் பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாததுக் குறித்த முக்கிய ஆதாரமும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில்,ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழப்பீட்டின் உண்மையான கணக்கு விபரம் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறியது. இதனடிப்படையில் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீட்டைக் குறித்து பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரணை மேற்கொண்டது.

ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு தொலைத்தொடர்பு அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதை இவ்வறிக்கை எதிர்த்துள்ளது.

பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பிரதமர் அலுவலகம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் முன்கூட்டியே அறிந்துசொல்ல தவறிவிட்டதாகவும், அமைதியாக இருந்து நடந்த தவறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கருதவேண்டியுள்ளது.

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சில பிரச்சனைகள் குறித்து தனது உண்மையான கவலைகளையும், அதேவேளையில் சில ஆலோசனைகளையும் தெரிவித்து 2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சராகயிருந்த ஆ.ராசா அலட்சியப்படுத்திவிட்டார் என அவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

பொதுக்கணக்குக் குழுவின் கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி முடிவடைவதால் வரைவு அறிக்கை மட்டும் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன தலைவரான பா.ஜ.கவின் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்டதற்கு பொதுக்கணக்கு குழுவின் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza