Tuesday, April 19, 2011

காஸ்ஸாவில் இத்தாலி நிருபர் கொலை – ஹமாஸ் கண்டனம்

arrigoni2
காஸ்ஸா:இத்தாலி நாட்டை சேர்ந்த விட்டோரியோ அரிகோனி(36) என்ற மனித உரிமை ஆர்வலர் ஃபலஸ்தீனின் காஸ்ஸாவில் இயங்கும் சிறிய தீவிரவாத குழு ஒன்றினால் கடத்தப்பட்டு கொல்லபட்டுள்ளார் என்று ஹமாஸ் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்தக் கொலை சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நால்வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
விட்டோரியோ அரிகோனி இத்தாலி நாட்டை சேர்ந்தவர், இவர் ஃபலஸ்தீனில் பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும் மற்றும் ஃபலஸ்தீன் மனித உரிமை ஆர்வலருமாக செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக காஸ்ஸா மீனவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்காணிக்க படகு ஒன்றை தயார் செய்தும் வைத்திருந்தார் என்று ஃபலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஃபலஸ்தீன மக்களின் விடுதலை மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்துகளினால் இத்தாலி மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர். இவரின் கருத்துகள் இத்தாலியில் ஃபலஸ்தீன மக்களுக்கு ஆதரவான களம் ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த கடத்தல் மற்றும் கொலையுடன் இஸ்ரேலுக்கு தொடர்புள்ளதாக ஹமாஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

விட்டோரியோ அரிகோனி ஃபலஸ்தீனில் இயங்கி வரும் ஃபலஸ்தீன் மக்கள் சார்பாக அமைக்கப்பட்ட ISM-ன்  உறுப்பினராவார். இவரின் கொலையுடன் அந்த அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் இது வரை பலஸ்தீனியில் கொல்லபட்டுள்ளனர். முன்னர் படுகொலை செய்யப்பட்ட மற்ற இரு உறுப்பினர்களும் இஸ்ரேலின் இராணுவத்தால் நேரடி தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

ISM கூறுகையில் விட்டோரியோ அரிகோனி கடந்த பத்து வருடங்களாக ஃபலஸ்தீன விசயத்தில் ஈடுபாடு கொண்டவராகவும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காஸ்ஸாவில் ஃபலஸ்தீன ஆதரவு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவர் கடத்தப்படுவதற்கு பிரதான காரணமாக தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவர் அபூ வாலித் அல்மக்தாஸ் என்பவர் காஸ்ஸாவை ஆட்சி செய்யக்கூடிய ஹமாஸ் நிர்வாகத்தால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரை ஹமாஸ் கடந்த வெள்ளிகிழமை மாலை ஐந்து மணிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் அல்லது விட்டோரியோ அரிகோனி கொல்லப்படுவார் என்று அந்த குழு அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாவே விட்டோரியோ அரிகோனி கொல்லபட்டுள்ளார் என்று பலஸ்தீனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள குழுக்கள் இந்த கொலையை தாம் செய்யவில்லை என்று மறுத்துள்ளது குறிப்பிடதக்கது.

ஃபலஸ்தீன் காஸ்ஸாவிலும் மேற்கு கரையிலும் இவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றுள்ளது. இதில் திரளான மக்கள் பங்குகொண்டுள்ளனர். இந்த கடத்தல் கொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளதுடன் விட்டோரியோ அரிகோனி ஃபலஸ்தீனர்களின் நண்பன் என்று தெரிவித்துள்ளது.

இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் காஸ்ஸாவில் வீடு ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கபட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza