படித்தவர்கள் அதிகம் என்று பெயர் வாங்கிய கேரளாவில், ஒவ்வொரு தேர்தலிலும், மற்ற தென் மாநிலங்களை விட அதிகளவு ஓட்டுப்பதிவு நடப்பது வழக்கம். ஆனால், இம்முறை தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை விட, கேரளத்தில் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தில் புதுச்சேரி முதல் இடம். தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன; கேரளா மூன்றாம் இடத்திற்கு போய் விட்டது.
இதற்கு, கேரளாவில் அதிகரித்து விட்ட புதிய கலாசாரம் தான் காரணம். முன்பெல்லாம் நாகரிகமான தேர்தல் பிரசாரம் இருக்கும். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முதல், தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவு வரை அனைத்தும் நாகரிகமாக இருக்கும். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் சாடாமல், கொள்கை ரீதியான விமர்சனங்களுடன் அமைதியாக பிரசாரம் செய்வர்.
தற்போது நடந்த தேர்தலில், இந்த நடைமுறை முற்றிலும் மாறி, ஒருவருக்கொருவர் வசை மாறி பொழியும் நிலை இருந்தது. இதற்கு, முழுக்க முழுக்க ஆட்சி, அதிகாரம், பதவி ஆசை தான் காரணம். ஓட்டுப்பதிவுக்கு, முதியவர்கள் கூட ஆர்வத்துடன் வருவது வழக்கம். ஓட்டுச் சாவடிகளில் புகுந்து கலவரம் செய்வது, குண்டு வீசுவது போன்ற பயங்கரவாத செயல்கள் அங்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, வட கேரளாவில், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் இவ்வகை கலாசாரம் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல கிராமங்களில் இதுபோன்ற நிலைமையால் வாக்காளர்கள் சாவடிக்கு வர அச்சப்பட்டனர். கண்ணூர் மாவட்டத்தில், தர்மடம் தொகுதியில் அனைத்து ஓட்டுச் சாவடிகளுமே பதட்டமான ஓட்டுச் சாவடிகள் என அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இம்மாவட்டத்தில், கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது, தற்போது, அமைதியாக தேர்தல் நடந்தது எனலாம்.
"தேர்தலின்போது தனி நபர் விமர்சனம், இரு முன்னணிகளும் தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் விமர்சித்தது, முறைகேடுகள் குறித்த விசாரணை பைல்கள் மீண்டும் தூசி தட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலை, முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெரியாமல் இரு முன்னணிகளிலும் இருந்து வந்த மந்த நிலை' ஆகிய காரணங்களால் ஓட்டுப்பதிவு தமிழகத்தை விட குறைந்து விட்டது என, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment