Wednesday, April 20, 2011

சிறுபான்மைச் சமூக மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க மோடி அரசு மறுப்பு

அஹ்மதாபாத்:2010-11ம் ஆண்டிற்கான தேர்வுகள் முடிந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மேல்படிப்பு படிக்கவேண்டும் என்ற கனவுகளோடும் ஆசைகளோடும் உள்ள முஸ்லிம் மாணவர்கள் குஜராத்தில் வேதனையில் உள்ளனர்.

நடுவண் அரசு பிரதமர் உதவி திட்டத்தின் கீழ் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கூறி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குஜராத்தில் ஐந்து மில்லியன் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இதில் அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற தகுதியுடயவர்களாய் இருந்தும் ஏனோ மகாத்மா பிறந்த மாநிலத்தில் மட்டும் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்பட மறுக்கிறது. இதனால் ஆயிரகணக்கான முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்க போதிய பணவசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

 மோடி அரசு ஆண்டிற்கு அளிக்கும் மொத்த கல்வி உதவித் தொகையில் 25 சதவீதமான 12.5 மில்லியன் ரூபாயை சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்க  முன்வர விரும்பவில்லை என குஜராத் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் கியாசுதீன் ஷேக் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பால் சிறுபான்மைச் சமூகத்திற்கு மோடி அரசு செய்யும் அவலங்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஷேக் கூறியதாவது எவ்வாறு உதவித்தொகை பெறுவது என்பது பற்றி தெளிவான வரையறை இல்லை என தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தின் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பின் தலைவர் கலீம் அன்சாரி, ஜமாத் இ இஸ்லாமியின் தலைவர் ஷபி மதனி  மற்றும் சர்வஜனிக் கல்வி கழகத்தின் தலைவர் கசம் வோரா ஆகியோர் சிறுபான்மைச் சமூகத்தின் விண்ணப்பங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும்  சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் உதவி திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க மாநிலத்தில் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் உதவித்தொகை குறித்து வழிகாட்டுதலை தரும் புத்தகம் ஒன்றை அச்சடிக்க முடிவு செய்துள்ளனர். மோடி அரசு தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யாததை கண்டிக்காத நடுவண் அரசிற்கு கண்டனம் தெரிவித்தனர். வருகின்ற மே முதல் தேதி இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு சிறுபான்மை சமுதாயம் பெற வேண்டிய அனைத்து உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கொணர பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி மோடி பல முஸ்லிம் தலைவர்களை சந்தித்து உதவித்தொகை வழங்குவது பற்றி பேசிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோடி தன்னுடைய சிறுபான்மை எதிர்ப்பு புகழை மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் சிறுபான்மை சமூக தலைவர்கள் மோடிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தால் மோடி சரியான தருணத்தில் இந்த திட்டத்தை பற்றி அறிவிப்பார் எனவும் பிஜேபி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza