ஸ்ரீநகர்:இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புத்கம் மாவட்டத்தில் ஷராரே ஷெரீஃப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெண் வேட்பாளரான ஹஸீனா பேகம்(வயது 40) சுடப்பட்டார். கடுமையாக காயமுற்ற இவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் மரணமடைந்தார். ஆப்போசிஷன் பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் பார்டியின் உறுப்பினர்தாம் ஹஸீனா பேகம்.
13-ஆம் தேதி துவங்கிய கஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் 16 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தல் களத்தில் நடைபெறும் முதல் அரசியல் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஸீனா பேகத்தை போராளிகள் சுட்டுக் கொன்றதாக கூறிய முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொலைக்கு பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்குமா என்பது கூறமுடியாது என பதிலளித்துள்ளார். போலீஸ் விசாரணை நடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment