Friday, April 29, 2011

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்

Afghan-air-force-shooting-007
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால், எதற்காக துப்பாக்கியால் பைலட் சுட்டார் என்பது தெளிவாகவில்லை என நேட்டோ செய்தித் தொடர்பாளர் மேஜர் கிம் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதிதான் காபூல் விமானநிலையம். ஆனால், தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், ஏதேனும் போராளி இயக்கத்திற்கு இந்த சம்பவத்தில் பங்கிருப்பதாக தெளிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் தாலிபான் போராளிகள் பணியாற்றுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

ஆப்கானின் பாதுகாப்பு பொறுப்பை வெளிநாட்டு ராணுவத்தினர் ஆப்கான் படையினரிடம் ஒப்படைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ள சூழலில் இச்சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த போலீஸ்காரர் ஒருவர் ஆறு அமெரிக்க ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார். ஃபர்யாப் மாகாணத்தில் இம்மாதம் நான்காம் தேதி எல்லை காவல்துறையில் பணியாற்றிய அதிகாரியொருவர் இரண்டு நேட்டோ ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza