புதுடெல்லி : இந்தியாவில் மனித உரிமைகளை பேணிக் காப்பதில் தேசிய மனித உரிமை கமிஷன் தோல்வியை தழுவியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆல் இந்தியா நெட்வர்க் ஆஃப் என்.ஜி.ஓ,நேசனல் அண்ட் ஸ்டேட் ஹ்யூமன் ரைட்ஸ் இன்ஸ்ட்யூசன்ஸ் மற்றும் சில மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய ஆய்வுத் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய மனித உரிமை கமிஷன் அரசின் வெறும் ஒரு ஏஜன்சியாக மாறியுள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸாரிடம்தான் புகார்களை விசாரிக்கும் பொறுப்பை கமிஷன் ஒப்படைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாந்தர குடிமக்களுக்கான அந்தஸ்துதான் வழங்கபடுகிறது. மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்பட்டால் அதன் மீதான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கமிஷனின் அதிகாரத்தை மிகவும் குறைந்த வழக்குகளிலேயே பயன்படுத்துகிறது. அரசின் விருப்பங்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து கமிஷன் பின்வாங்கியுள்ளது.
போலீஸார் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராகத்தான் அதிகமான புகார்கள் கமிஷனுக்கு கிடைத்த போதிலும் இந்த இரண்டு பிரிவினரையும் நிர்வகிக்கும் உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் தேசிய மனித உரிமை கமிஷன் இயங்குகிறது.
கமிஷன் உறுப்பினர்களின் நியமனம் மனித உரிமை தொடர்பான அனுபம் மற்றும் அறிவின் அடிப்படையில் அல்ல. சம்பளம் தரும் அரசை கண்காணிக்க அதிகாரிகளை நியமிப்பது போலத்தான் நியமனமும் நடக்கிறது. நியமனம் வெளிப்படையாக நடப்பதில்லை. கமிஷனின் நிதித் தொடர்பான செயல்பாடுகளுக்கு அரசின் கடுமையான கட்டுப்பாடு உள்ளது.
கடுமையான மனித உரிமை மீறல்களில் கமிஷன் மெளனம் சாதித்து வருகிறது. வழக்குகளை முடிக்க போலீஸின் அறிக்கைகளையே பெரும்பாலும் கமிஷன் சார்ந்துள்ளது.
ஆயிரக்கணக்கான பெண்களின் புகார்களை கையாள கமிஷனில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை. மக்கள் மீது அரசு பலம் பிரயோகிப்பதை அங்கீகரிக்கும் விதமாக தற்போதைய தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் அறிக்கை அமைந்துள்ளது.
மோதல் கொலைகள்(என்கவுண்டர்) பல வேளைகளில் அத்தியாவசியமானது என்ற கே.ஜி.பாலகிருஷ்ணனின் அறிக்கை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. வரலாற்று ரீதியிலான அறிவும், புரிந்து செயல்படுவதிலும் கமிஷன் பின் தங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள உதவும் ஹாட்லைன் நம்பர் திறமையாக செயல்படுவதில்லை. ஒரு ஓய்வு பெற்ற முதன்மை நீதிபதிதான் கமிஷனின் தலைவராக இருக்கவேண்டும் என்ற சட்டத்தை திருத்தவேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment