Sunday, May 1, 2011

அச்சமின்றி செயல்படுங்கள்:சி.பி.ஐக்கு பிரதமர் உபதேசம்

Chidambaram
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம்,காமன்வெல்த் போட்டிகள் ஆகிய ஊழல் வழக்குகளை விசாரித்துவரும் மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐக்கு அச்சமின்றி செயல்பட பிரதமர் உபதேசித்துள்ளார்.

புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐயின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைத்து பேசிய பிரதமர் கூறியதாவது:2ஜி அலைக்கற்றை,காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்குகளை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய மன்மோகன்சிங், இந்த வழக்குகள் உங்களுக்கு பெரிய சோதனை. சிபிஐ மேற்கொள்ளும் வழக்குகளை அச்சமின்றி, சார்பு தன்மை இல்லாமல் விசாரிக்க வேண்டும்.

 யார்-யார் தவறு செய்துள்ளார்களோ அவர்கள் மீது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரணைக்குள்படுத்த வேண்டும். அவர்கள் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது. தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். முறைகேட்டில் சிக்கியவர்கள் யார் என்று பார்க்காமல் அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். இதில் விமர்சனத்துக்கு இடமளிக்காமல் விசாரிக்க வேண்டும்.

 சிபிஐ இப்போது மிக முக்கிய ஊழல் வழக்குகளை விசாரித்து வருகிறது. இதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது நேர்மையான விசாரணை, விரைவான முடிவைத்தான். எனவே விசாரணைக்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்ட வேண்டும். இதில் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் பணிந்துவிடக்கூடாது. நமது சமுதாயம் திறந்த, வெளிப்படையான சமுதாயம். எல்லாப் பிரச்னைகளிலும் பல கருத்துக்கள், நோக்கங்கள் இருக்கும். எது சரியோ அதை சிபிஐ எடுத்து செயல்பட வேண்டும்.

 இதில் முக்கிய கவனத்தை சிபிஐ செலுத்த வேண்டும். ஏனெனில் இது பதற்றமான பிரச்னையாகும். இந்த நாட்டின் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்களது பணிகளை செவ்வனே செய்வோரை துன்புறுத்தக்கூடாது. பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படக்கூடாது.

இதுபோன்ற விசாரணைகளில் அப்பாவிகள் எந்தவகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. தவறு செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இருக்கும் ஒரே வழி விசாரணைதான். அந்த விசாரணை நேர்மையாக, அப்பாவிகள் பாதிக்கப்படாதவகையில் இருக்க வேண்டும்.

 சிபிஐயிடம் இப்போது ஏராளமான வழக்குகள் வந்து குவிந்துள்ளன. அந்த வழக்குகளை விசாரிக்க 71 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அவற்றில் 64 நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டன. மற்ற நீதிமன்றங்களுக்கு அனுமதி அளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தவகையில் மாநில அரசுகள் சிறப்பு நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி இதில் கவனம் செலுத்தவேண்டும்.

 சிபிஐ சுதந்திரமாக, விரைவாக செயல்பட அனைத்து அடிப்படை வசதிகள், தேவையான ஊழியர்கள் ஒதுக்கப்படுவர். இது சுதந்திரமான அமைப்பு. மற்ற விசாரணை அமைப்புகளுக்கு சிபிஐ முன்னோடியாக உள்ளது. அதன் தரம் விசாரணை மூலம் வெளிப்பட வேண்டும் என்றார் பிரதமர்.

 விழாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 186 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் 11 மாடிக்கட்டிடமாக சி.பி.ஐ தலைமையகம் கட்டப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza