Thursday, April 7, 2011

கஷ்மீர் உள்பட உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கை – டேவிட் காமரூன் ஒப்புதல்


david-cameron_6_jpg

இஸ்லாமாபாத்:இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான கஷ்மீர் தர்க்கம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்களுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கைதான் என பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கிடையே சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரிட்டனின் கடந்த கால வீழ்ச்சிகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் காமரூன்.


“உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போதும் நிலவும் எல்லைப் பிரச்சனைகளுக்கும் அதன் பெயரில் நடைபெறும் போர்களுக்கும் காரணம் நாங்கள்தாம்.கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண தங்களால்  ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்யமுடியும் என கருதவில்லை. காரணம், அப்பிரச்சனைக்குரிய துவக்கமே எங்களிடமிருந்துதான் உருவானது.

உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணம் பிரிட்டனாகும்” இவ்வாறு காமரூன் கூறுகிறார்.கஷ்மீர் பிரச்சனைக்கு உரிய தீர்விற்கு ஏதேனும் உங்களால் செய்ய முடியுமா? என பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் காமரூன் இந்த பதிலை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காமரூனின் பதிலைக் கேட்ட மாணவர்களும், பேராசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளையில் பிரிட்டனில் காமரூனின் பேச்சு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

கடந்த காலத்தைக் குறித்து பெருமைக் கொள்வதும், அதேவேளையில் காலனியாதிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்பொழுது அவமானம் தோன்றும் மனோநிலையை பிரிட்டனின் அரசியல் தலைவர்கள் திருத்தவேண்டுமென வரலாற்றாசிரியர் டெய்ஸி கூப்பர் கருத்து தெரிவித்துள்ளார்.

காமரூனின் கூற்று ஆபத்தானதும், அவசியமற்றதுமாகும் என லேபர் கட்சியின் எம்.பியும் வரலாற்றாசிரியருமான ட்ரிஸ்டாம் ஹண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

காமரூன் தனது அறிக்கையை வாபஸ் பெற்று மன்னிப்புக்கோர சில லேபர் கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.19-ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து மக்களுக்கு பிரிட்டன் செய்த கொடூரங்களுக்கு 1997-ஆம் ஆண்டு டோனி ப்ளேயர் மன்னிப்புக் கோரினார். ஆப்ப்ரிக்க நாடுகளில் அடிமை வியாபாரத்தில் பிரிட்டனின் பங்கினைக் குறித்து தனக்கு கடுமையான வேதனை உண்டு என 2006-ல் ப்ளேயர் வெளிப்படையாக தெரிவித்தார்.

காலனியாதிக்க ஆட்சியில் உலகமெங்கும் பிரிட்டன் நடத்திய கொடூரங்களுக்காக கார்டன் ப்ரவுன் 2007-ல் மன்னிப்புக் கோரினார்.
பிரிவினையின் காலத்திலிருந்தே நிலவி வரும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கஷ்மீர் பிரச்சனைக்கு உண்மையான பொறுப்பாளர்கள் பிரிட்டீஷார் என அன்றைய காலம் முதலே குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
கஷ்மீரை சர்ச்சைக்குரிய பிரதேசமாக தொடர்வதற்கு பிரிட்டன் வேண்டுமென்றே முயன்றதாகவும் சில வரலாற்றாய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza