நாக்பூர்:இந்தியாவின் தேசத் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியடிகளை பற்றி அமெரிக்க எழுத்தாளர் , ஜோசப் லெலிவெல்ட் எழுதிய , “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul – Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரித்திரப் புத்தகம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் தேசத் தந்தை என்று கருதப்படும் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக , சில பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகள் இத்தகையதொரு விவாதத்தை கிளப்பியுள்ளன.
ஆனால், மகாத்மா காந்தி பற்றிய ஜோசப் லெலிவெல்ட்டின் புத்தகம் இன்னும் இந்தியாவில் பிரசுரமாகவில்லை, விற்பனைக்கும் வரவில்லை. ஆனால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வெளியான இந்த புத்தகம் குறித்த மதிப்புரைகளை மறு பிரசுரம் செய்துள்ளன.
இந்த புதிய வாழ்க்கைச் சரித்திர புத்தகம் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்க புதன்கிழமை குஜராத் மாநில சட்டப்பேரவை ஒரு மனதாக வாக்களித்தது. மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியும், இந்தப் புத்தகத்தை, அடிப்படையற்ற, உணர்ச்சிகளைக் கிளப்பும் நிந்தனை, ஒரு தேசத் தலைவரை இழிவுபடுத்தும் புத்தகம் என்று வர்ணித்து, மத்திய அரசும் இதே போன்ற தடையை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புலிட்சர் விருது பெற்றவருமான, ஜோசப் லெலிவெல்ட், காந்தியை, இருபால் உறவுக்காரர் என்றோ அல்லது இனவெறியர் என்றோ தான் எந்த இடத்திலும் வர்ணிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், தன்னை ஒரு ஜனநாயக நாடாகக் கூறிக் கொள்ளும் ஒரு நாடு, ஒரு புத்தகத்தை அந்த நாட்டில் எவரும் படிப்பதற்கு முன்னரே தடை செய்வது அவமானகரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்புத்தகத்தை தடைச் செய்யப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: ‘புத்தகத்தில் காந்தியைக் குறித்து மோசமாக ஒன்றும் எழுதப்படவில்லை என லெலிவெல்ட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள புத்தகத்தை வல்லுநர்கள் மிக கவனமாக ஆராய்ந்துள்ளனர். ஆதலால் புத்தகத்தை தடைச் செய்வதற்கான பிரச்சனை உருவாகவில்லை.’ இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment