Sunday, April 10, 2011

இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது – 17 பேர் மரணம்

imagesCAJ7Q5G0காஸ்ஸா:ஃபலஸ்தீனில் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காஸ்ஸாவின் மீது மூன்றாவது நாளாக இஸ்ரேல் தனதுகாட்டு மிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கடலோர பிரதேசமான காஸ்ஸாவில் தரை, வான் மார்க்கங்கள் வாயிலாக இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நேற்று நடத்தியுள்ளது. 

காஸ்ஸாவின் தெற்கு பகுதியான ரஃபாவுக்கு அடுத்துள்ள டெல் அஸ்ஸுல்தானில் காரின் மீது இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

ஹமாஸின் ஆயுத பிரிவான அல்கஸ்ஸாம் பிரிகேட்ஸின் உள்ளூர் கமாண்டர் தைஸீர் அபூஸனெய்மா, அவரது உதவியாளர் முஹம்மது அவாஜ் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸ்ஸா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் சாதாரண மக்களாவர். சிவிலியன்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்துவதாக ஆம்புலன்ஸ் அண்ட் எமர்ஜென்சி சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அபூ ஸல்மியா ஃபலஸ்தீன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வடக்கு காஸ்ஸாவில் அதுரஜீல் பார்க்கிங் பகுதியில் நடந்த தாக்குதலில் ஏராளமான வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் எவருக்கும் காயமடைந்ததாக தகவல் இல்லை. ஜபலிய்யாவில் அகதிகள் முகாம்கள் மீதும், அல் உமர் பிரதேசத்திலும் குண்டுவீச்சு நிகழ்ந்தது.

2008-2009 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு உருவான போர் நிறுத்த ஒப்பந்தம் நிலவும் வேளையிலும், இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி காஸ்ஸாவின் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி தருவோம் என ஹமாஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza