Monday, April 11, 2011

இஷ்ரத் ஜஹான்:விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தினால் சி.பி.ஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் – குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் காட்டம்


israt_jahan_feke_encounter_gujarat_20090921
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின்(எஸ்.ஐ.டி) பணிகளுக்கு  தடைகள்  ஏற்படுத்துவது தொடருமானால் விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்படுமென குஜராத் உயர்நீதிமன்றம் மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை குஜராத் மாநில உயர்நீதிமன்றம்தான் எஸ்.ஐ.டியிடம் ஒப்படைத்திருந்தது.

அரசு விசாரணைக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதிகளான ஜயந்த் பட்டேல், அபிலாஷ் குமாரி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியுள்ளது. சி.பி.ஐக்கோ அல்லது என்.ஐ.ஏவுக்கோ வழக்கை விசாரிக்கும் பொறுப்பை வழங்கும் நிர்பந்தத்தை உயர்நீதிமன்றத்திற்கு ஏற்படுத்தக் கூடாது என குஜராத் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்ற பெஞ்ச்.

எஸ்.ஐ.டியின் விசாரணை திருப்தியில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், விசாரணையின் முன்னேற்றம் குறித்த இன்னொரு அறிக்கையை முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து இம்மாதம் 21-ஆம் தேதிக்குள் நீதிமன்ற பொது பதிவாளரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

விசாரணையில் எஸ்.ஐ.டியில் முக்கிய மூன்று அதிகாரிகளுக்கிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எல்லா பணிகளையும் எஸ்.ஐ.டிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட துணை போலீஸ் கமிஷனர் வி.ஆர்.தோலிதான் செய்கிறார். எஸ்.ஐ.டி செயல்படவில்லை என குஜராத் அரசு கூறுகிறது. ஆனால் விசாரணையை தடுப்பதற்கு குஜராத் அரசு எல்லாவித முயற்சிகளை மேற்கொள்கிறது என நீதிமன்றம் கூறியது.

தான் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் எஸ்.ஐ.டி உறுப்பினர் விசாரணை தொடர்ந்து நடத்த முனையும் வேளையில் இன்னொரு உறுப்பினரான மோகன் ஜா அவருக்கெதிராக புகார் அளித்துள்ளார். இவர்கள் மாநில கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரிகளாவர். விசாரணையில் ஊறு விளைவிக்க காரணமாகும் எனக் கருதி இதர மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது மேற்கண்ட புகாரின் மூலம் காலதாமதமானதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அட்வக்கேட் ஜெனரல் கமால் திரிவேதியின் முன்னிலையில் நீதிமன்றம் இதனை தெரிவித்தது. எஸ்.ஐ.டி தலைவர் கர்னைல் சிங் பணி இடமாற்றம் தொடர்பாக நீதிமன்றத்தை ஆலோசிக்காதது உள்பட ஏராளமான உதாரணங்களை கூறி குஜராத் அரசின் அணுகுமுறை சரியில்லை என நம்புவதற்கற்கான கட்டாயத்திற்கு நீதிமன்றம் தள்ளப்பட்டது என பெஞ்ச் தெரிவித்தது.

கர்னைல் சிங்கை மிசோராமிற்கு மத்திய அரசு பணி இடமாற்றம் செய்தபொழுது நீதிமன்றத்திடம் ஆலோசிக்காமல் மாநில அரசு ஏன் அதற்கு சம்மதம் தெரிவித்தது என பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

நீதிமன்றம் கோரிய பொழுதும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யாதது ஏன்? என்பதையும் நீதிமன்றம் ஆராய்ந்தது. கூடுதல் இயக்குநர் ஜெனரல் பி.பி.பாண்டே, போலீஸ் சூப்பிரண்ட் ஜி.எல்.சிங்கல், துணை சூப்பிரண்ட் தருண் பரோட் ஆகியோரை ஒரு வாரத்திற்குள் இடம் மாற்றம் செய்யவேண்டுமென நீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

2004 ஜூன் மாதம் இஷ்ரத் ஜஹானை அஹ்மதாபாத்தில் வைத்து க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் சுட்டுக்கொன்றது. பிராணேஷ் குமார் என்ற ஜாவேத், அம்ஜத் அலி ரானா, ஷீஷான் ஜோஹர் ஆகியோர் அன்று இஷ்ரத்துடன் கொல்லப்பட்டனர். முதல்வர் மோடியை கொலைச்செய்ய வந்தவர்கள் என குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் பொய்யை கட்டவிழ்த்துவிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza