Tuesday, March 8, 2011

NCHRO-ன் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

கடந்த 2005-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர் போலீஸார்.

விசாரணையின்போது அவரை தலைகீழாக தொங்கவிட்டு பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்புக் கம்பியை அவரது ஆசனவாய்க்குள் செலுத்தி கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரை கொலைச் செய்தனர் DSPக்கள் பிரதாப்சிங், சந்திரபால், ஈஸ்வரன் மற்றும் குமரிமாவட்ட காவல்துறை அதிகாரிகள்.

காவல்நிலைய சித்திரவதையில் மசூத் கொல்லப்பட்ட வழக்கை கடந்த நான்கு வருடங்களாக மதுரை உயர்நீதிமன்றத்திலும் தென்காசி நீதிமன்றத்திலும் நடத்தி வருகிறது பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் மனித உரிமை அமைப்பான NCHRO என்ற மனித உரிமை இயக்கங்களுக்கான கூட்டமைப்பு.

மேலும் பாதிக்கப்பட்ட மசூதின் குடும்பத்திற்கு இழப்பீடுக்கோரி NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் தலைமையிலான குழு பலமுறை சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரையும், உள்துறை செயலாளரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் ஆகியோர் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது NCHRO.

NCHRO-வின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மசூதின் மனைவி அசனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி குமரிமாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டது.

அதன்படி அந்த இழப்பீட்டு தொகையை NCHRO வின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி, நெல்லை மேற்குமாவட்ட ஒருங்கிணைப்பாளர் S.P.சர்தார் அரஃபாத் ஆகியோர் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த தொகையை அசனம்மாளிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த NCHRO-ன் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி அவர்கள், "நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிந்துவிடவில்லை. காவல்நிலைய சித்திரவதையின் மூலம் மசூத் அவர்களை கொலைச் செய்த DSP-க்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நாங்கள் நடத்தி வருகின்றோம். அவர்களுக்கு தண்டனை வாங்கி தரும் வரை போராட்டம் ஓயாது." என்று கூறினார்.
செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza