Wednesday, February 16, 2011

அந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம் முஸ்லிம்களின் துயர வாழ்க்கை

புதுடெல்லி,பிப்.15:ரஸியா பேகம், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டாவைச் சார்ந்தவர். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், துயரச் சம்பவங்களையும் விவரிக்கும்போது உடைந்துபோய் அழுகிறார். கடந்த 24 வருடங்களாக டெல்லி போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறது இவரது குடும்பம். சில தினங்களுக்கு முன்னால் ரோஹினி பகுதியைச் சார்ந்த போலீசார் இவரது மகள் ராணியை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.1750 ஐ பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர்.

ரஸியாவின் ஒரே மகனான அப்துற் ரஸ்ஸாக் கடந்த 2006-ஆம் ஆண்டு தற்கொலைச் செய்துக்கொண்டார். இதற்கு போலீசாரின் தொந்தரவும் இதர பிரச்சனைகளும்தான் காரணம். ஆனால், போலீசார் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் ஏற்பட்ட மனச்சோர்வினால் தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

ரஸியா, போலீசாரால் நிர்மூலமான தனது வாழ்க்கையைக் குறித்து விளக்குகிறார்:

ரஸியா, பஹாடியில் பெங்காளி மொழி பேசும் அஸ்ஸாம் மக்கள் அதிகமாக வாழும் சேரிக் குடிசைகள் நிறைந்த தைமீர் நகரில் வசித்து வருகின்றார். இப்பகுதியில் வாழும் அஸ்ஸாம் முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ அல்லது சில நேரங்களில் மூன்று தடவை போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு ஆளானவர்களாவர். இவர்களில் பலர் பங்களாதேஷிற்கு அனுப்பப்பட்டனர். போலீசார் இங்கு வாழும் மக்களை பிடித்துச் செல்வது வழக்கான ஒன்றாகிவிட்டது.

போலீசார் வாரம் ஒருமுறை இங்குவந்து எங்களில் ஒருவரை பிடித்துச் செல்வர், காரணம் கேட்டால் "நீங்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள்" எனக் கூறுவர். பிறகு எங்களை போலீஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்குவார்கள். மேலும் எங்களிடம் பணத்தை கேட்பார்கள். சிலர் போலீசாருக்கு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பணத்தை கொடுப்பர். இல்லாவிட்டால் அவர்கள் பங்களாதேசுக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு கூறிய ரஸியா தான் இந்தியாவைச் சார்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, வங்கிக் கணக்குப்புத்தகம் ஆகியவற்றை ஆதங்கத்தோடு காண்பித்தார்.

பணம் சம்பாதிக்கும் வியாபாரம்
டெல்லி போலீஸ் தைமூர் நகரை பணம் சம்பாதிக்கும் வியாபார ஸ்தலமாகவே காண்கிறது. டெல்லியின் அனைத்து போலீஸ் நிலையங்களிலிருந்து தைமூர் நகருக்கு போலீஸார் வருகின்றனர். பிடித்துச் செல்லும் நபர்களிடம் பணத்தை கறப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பணம் இல்லையா? அவர்களது வாழ்க்கை அம்பேல்தான். உடனடியாக பங்களாதேசுக்கு அனுப்பப்படுவர்.

"சில நேரங்களில் ரோஹினி போலீஸ், சில நேரங்களில் ஜாமிஆ நகர் போலீஸ் இல்லாவிட்டால் ஆர்.கே.புரம் போலீஸ் என அனைவருமே தைமூர் நகருக்கு வந்து பங்களாதேஷ் முஸ்லிம்கள் எனக் குற்றஞ்சாட்டி இங்கு வாழும் நபர்களை இழுத்துச் செல்வது வழக்கமாகும்.

டெல்லியில் குண்டுவெடிப்பு ஏதேனும் நிகழ்ந்தாலே போதும், இங்கிருக்கும் நபர்களைத்தான் பிடித்துச் செல்வர்". இவ்வாறு கூறும் முஸ்தபா, போலீசாரால் இரண்டு தடவை பிடித்துச் செல்லப்பட்டவர். லஞ்சமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலைச் செய்துள்ளனர்.

"எவருமே எங்களைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. நாங்கள் வாழ்ந்தால் அல்லது இறந்தால் அவர்களுக்கு என்ன?" விரக்தியுடன் பேசும் ரஸியா ஒரு சிறிய அறையில் வசிக்கிறார். இந்த அறைதான் அவருக்கு சமையலறையும், படுக்கையறையும் எல்லாமே.

ரஸியாவின் வாழ்க்கையைப் போலவே தைமூர் நகரின் சேரிப் பகுதிகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை தேவைகளை நிறைவுச் செய்ய டெல்லிக்கு வந்தார் ரஸியா. அன்று முதல் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்திவருகிறார்.

"பங்களாதேஷி" என என்னை அடையாளமிட்டு அழைப்பதிலிருந்து நான் தப்பிவிட முடியாது எனக் கூறுகிறார் ரஸியாவின் மகளான ராணி. இவரைத்தான் சில தினங்களுக்கு முன்னால் போலீசார் அழைத்துச் சென்று பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர். தான் இந்திய முஸ்லிம் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் காண்பிக்கிறார் ராணி.

பிரோஷா பேகம். இவர் ஹிந்தி மொழியை சிரமப்பட்டு பேசுகின்றார். ஆனாலும், அவர் வஞ்சகர்களால் தனக்கு ஏற்பட்ட வேதனைகளை பகிர்ந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் டெல்லி போலீசாரால் பிரோஷா பேகம் பங்களாதேசில் கொண்டு விடப்பட்டார். "நான் பங்களாதேஷில் கொண்டு விடப்பட்ட பொழுது எங்கு செல்வது என தெரியாமல் விழித்தேன். சாலையோரம் நின்றுக் கொண்டு பலரிடம் பணத்தை கேட்டுவாங்கி மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன்" எனக் கூறும் பிரோஷா பேகம் தான் ஒரு உண்மையான இந்தியர் என ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்.

போலீசார் தொந்தரவு இவர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. இதனால் இவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இதுமட்டுமல்ல வேலையின்மை, வறுமை, குடிநீர் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு என வேறு சில பிரச்சனைகளையும் இவர்கள் சந்திக்கின்றார்கள்.

இப்பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதின் இமாம் ஷக்கீல் அஹ்மதுக்கு கூட இப்பிரச்சனைக்குரிய தீர்வைக் குறித்து நம்பிக்கை இல்லை. போலீஸ் நிர்வாகத்தில் அடிப்படையான மாற்றம் வராவிட்டால் இப்பிரச்சனை தொடரும் என அவர் நம்புகிறார். இப்பகுதியில் நடக்கும் பல நிகழ்வுகளும் அவருக்கு தெரியும். மஸ்ஜிதுக்கு தொடர்ந்து வருகின்ற நபர்கள் சில நேரங்களில் திடீரென
காணாமல் போனால் இமாமுக்கு புரிந்துவிடும் இவர்கள் பங்களாதேஷில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளனர் என.

இவர்கள் பங்களாதேஷிகள் அல்ல
அஸ்ஸாம் முஸ்லிம்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள் எனக் கூறுவது தவறாகும். இந்திய பிரஜை என்பதை நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் இவர்களிடம் இருந்த போதும் ஏழைகளாக இருப்பதால் இவர்களின் குடியுரிமை சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறது. மேலும் எந்தத் தவறும் செய்யாமலேயே
தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

twocircles.net இணயதள இதழின் செய்தியாளரிடம் தைமூர் நகர் மக்கள் கூறுகையில், "உண்மையில் இங்கு பங்களாதேஷைச் சார்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருந்தால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் இன்ஃபார்மர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் உண்மையான இந்தியக் குடிமக்களான
அப்பாவி அஸ்ஸாம் மாநில முஸ்லிம்கள் மீது போலீசார் பொய்வழக்கில் சிக்கவைத்து சித்திரவதைச் செய்து காசை கறக்கும்போது அதில் பங்கினையும் பெற்றிருப்பர்.

இந்த அப்பாவி மக்களுக்கு தங்களுக்கு இழைக்கப்படும் தேவையற்ற தொந்தரவுகள் எப்பொழுது முடிவுக்கு வரும் என்பது குறித்து தெரியாமல் தங்களது அன்றாட வாழ்க்கையை துயரத்துடன் கழித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza