Friday, February 4, 2011

ரகசிய சிறைகள் ஈராக்கில் தற்பொழுதும் செயல்பட்டு வருகின்றன

பாக்தாத்,பிப்.3:பிரதமர் நூரி அல் மாலிக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கில் தற்பொழுதும் ரகசிய சிறைகள் செயல்படுவதாக மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரகசிய சிறைகளை மூடப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்த நூரி அல்மாலிக்கி தனது வாக்குறுதியை காற்றில் பறத்திவிட்டார் என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

வடக்கு பாக்தாதில் ராணுவ தலைமையகம் செயல்படும் கேம்ப் ஜஸ்டிஸ் சிறையில் 280 சிறைக்கைதிகள் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ பார்க்க அனுமதிப்பதில்லை. ரகசிய சிறைகளைக் குறித்த தகவல்கள் கடந்த ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து சிறைக் கைதிகளை சட்ட அமைச்சகத்திடம் ஒப்படைக்கப் போவதாக நூரி அல் மாலிகி தெரிவித்திருந்தார்.

அரசு ஆவணங்கள், அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் ஆகியோருடன் நடத்திய நேர்முகம் ஆகியவற்றையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையை சட்டத்துறை அமைச்சக அதிகாரி பரூஷோ இப்ராஹீம் மறுத்துள்ளார். கேம்ப் ஜஸ்டிஸில் அனைத்து சிறைக் கைதிகளும் சட்டத்துறையின் கீழில்தான் உள்ளனர். இவ்வறிக்கை ஈராக் அரசின் நம்பிக்கையை கெடுக்கும் விதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டால் அதனை ஆதாரத்துடன் அவர்களது குடும்பத்தினர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கலாம் என சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் ஈராக்கியா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமில் அல் தொலய்மி தெரிவித்துள்ளார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza