Sunday, February 27, 2011

சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார்


யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை.

இப்பொழுது புதியதொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர்தாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். கடந்த 10 ஆண்டுகளில் அவர் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல இடங்களிலும் சொத்துக்களை குவித்துள்ள சுவாமிஜிக்கு கோயில்கள் நிறைந்த ஹரித்துவாரில் மட்டும் 1000 கோடிக்கான சொத்துக்கள் உள்ளனவாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சஞ்சரித்த சுவாமி ராம்தேவ் இன்று ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர். தனக்கு சொந்தமான சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வக்கில்லாத ராம்தேவின் நம்பமுடியாத வளர்ச்சியின் பின்னணியைக் குறித்து சி.பி.ஐ விசாரித்து உண்மையை வெளிக்கொணர கோரியது நாத்திகர்கள் அல்லர். மாறாக அகில பாரதீய அகாரா பரிஷத்தின் செய்தித்தொடர்பாளர் பாபா
ஹட்யோகிதான். இதேக் கோரிக்கையை முன்வைத்து பலரும் முன்வந்துள்ளனர்.

வட இந்தியர்களுக்கு மத்தியில் ஆஷ்தா தொலைக்காட்சி சேனல் மற்றும் இதர சேனல்கள் வாயிலாக அதிகாலைகளில் யோகா பயிற்சியை துவங்கிய ராம்தேவின் வளர்ச்சி திடீரென உருவானதாகும்.

ராம்தேவால் உருவாக்கப்பட்டதுதான் உடல் நலனுக்கான பயிற்சியான யோகா கலை என பல மக்களும் தவறாகவே விளங்கி தொலைக்காட்சிக்கு முன்பாக உட்கார்ந்து பயிற்சி எடுத்துவருகின்றனர்.

சுவாமி என்ற நிலையில் கட்சி பேதமற்ற அனைவரும் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ராம்தேவின் பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளையின் வருமானம் குவியத் துவங்கியது. திவ்யயோக மந்திர், திவ்ய யோகா ஆசிரமம், திவ்யா ஃபார்மஸி, பதஞ்சலி ஹெர்பல், பதஞ்சலி யோகாபீடம், பதஞ்சலி யோகா பல்கலைக்கழகம், பதஞ்சலி மெகா ஃபுட் பார்க், நிவாரண தியானம், ஆயுர்வேதா சிகிட்சை மையம் என அறக்கட்டளையின் கீழ் நிறுவனங்களின் பட்டியல் நீளுகிறது.

பெருமளவிலான நிலங்களும், ஆஷ்த தொலைக்காட்சியின் பெரும் பங்குத் தொகையும் ராம்தேவுக்கு சொந்தமாகும். ஹரித்துவாருக்கு வெளியே வந்தால் ராம்தேவின் சொத்துக்களை கண்டுபிடிக்க தனியாக சர்வே நடத்தவேண்டிவரும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சங்கர்தேவ் என்ற சன்னியாசி சந்தேகமான நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து ராம்தேவின் ஆசிரமத்தின் செயல்பாடுகளில் மர்மம் நீடிக்கிறது என ஹட்யோகி கூறுகிறார்.

ராம்தேவின் ஆசிரமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளில் மோசடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மருந்துகளில் அஸ்திகள் இருப்பதாக சுட்டிக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். ஆனால், பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் சுவாமிஜிக்கு ஆதரவாக களமிறங்கியதால் பிருந்தா கப்சிப்பானார்.

மக்கள் ஆதரவு அதிகரித்தைத் தொடர்ந்து சுவாமிஜியின் கண்கள் அரசியலை நோட்டமிடத் துவங்கின. அதற்கான முயற்சியிலும் இறங்கினார் அவர். ஜூன் மாதம் கட்சியை அறிவிப்பேன் என அவர் கூறியதும் அவரை ஆதரித்த பல கட்சிகளும் மெதுவாக நழுவ துவங்கினர். ஏனெனில் தங்களுடைய வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் யோகாவுக்கு கிடைத்த மரியாதை சுவாமிஜியின் அரசியல் கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் 'கறுப்புப் பணத்திற்கான போர்' என பிரகடனப்படுத்தி ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அவர். இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதற்கிடையேதான் ராம்தேவின் சட்டத்திற்கு புறம்பான வருமானத்தைக் குறித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. அதில் முக்கியமானவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கியதுக் குறித்து ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய ராம்தேவை அருணாச்சல மாநில காங்கிரஸ் எம்.பியான நினோங் எரிங் 'ப்ளடி இந்தியன் டாக்' என திட்டியது சமீபத்திய சர்ச்சையாகும்.

காங்கிரஸ் எம்.பியை பாராளுமன்றத்தில் நுழைய அனுமதிக்கமாட்டோம் என ராம்தேவ் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். எம்.பியிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே ராம்தேவை ஆதரித்து பாசிச பா.ஜ.க களமிறங்கியுள்ளது. சாமியார்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதல்லவா?
செய்தி;கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza