Sunday, January 23, 2011

ஆஸ்திரேலிய பாதிரியார் கொலை தாரா சிங்குக்கு தூக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது.

இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza