குவைத்தின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குவைத் குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எம்.பி. ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குவைத் தனது 50வது தேசிய தினத்தையும், ஈராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையான 20வது சுதந்திர தினத்தையும், தற்போதைய அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாஹ் பதவியேற்ற 5வது ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 11 இலட்சம் குவைத் குடிமக்களுக்கு 1,000 குவைத் தினார் (சுமார் 1.60 இலட்சம் ரூபாய்) வழங்கப்படும் என்றும் வீட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் 14 மாதங்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படும் என்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நோக்குடன் உலகிலேயே மிக நீளமான தேசியக்கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று வலீத் அல்-தபதபயீ என்ற எம்.பி. அந்நாட்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ’குவைத்தின் தொழிலதிபர்களும், நிறுவன உரிமையாளர்களும் அன்பிலும் பொருளுதவி செய்வதிலும் பெயர் போனவர்கள்; அவர்கள் தமது சமூகக் கடமையாகக் கருதி தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும்; இதன் மூலம் வெளிநாட்டினரையும் குவைத்தின் தேசிய தின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுமார் 6 இலட்சம் இந்தியர்கள் குவைத்தில் பணிபுரிந்து வருகின்றனர். குவைத் கொண்டாட்டங்களை முன்னிட்டு போனஸ் கிடைக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி :பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment